‘பட்ஜட்’ வாக்கெடுப்பில் சிறிதரன், சுமந்திரன், சாணக்கியன் எதிர்ப்பு! – கூட்டமைப்பில் ஏனைய எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.
வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகிய எம்.பிக்கள் எதிராக வாக்களித்தனர். ஏனைய 7 எம்.பிக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் 41 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 81 வாக்குகளும் வழங்கப்பட்டன.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்ற நிலையில் மாலை 6.40 மணியளவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வரவு – செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களித்ததுடன், எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எதிர்த்து வாக்களித்தது. தேசிய மக்கள் சக்தியும் எதிராகவே வாக்களித்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகிய எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர். ஏனைய 7 எம்.பிக்களும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகிய எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் சபைக்கு வருகை தந்திருந்த போதிலும் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது.
அண்மையில் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க, வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இரண்டாம் வாசிப்பைப் போன்று மூன்றாம் வாசிப்பையும் ஆதரித்து வாக்களித்தார்.
2024ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த நவம்பர் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இரண்டாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதங்கள் இடம்பெற்றன.
இரண்டாம் வாசிப்பு 45 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி (இன்று) வரை மூன்றாம் வாசிப்பு மீதான விவாதங்கள் இடம்பெற்றன.