சிங்கப்பூரில் , ஆடவர்களிடம் பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்ற அதிகாரிக்கு பிரச்சனை.
ஆறு ஆடவர்கள் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கி இருக்க உதவி செய்வதற்காக அவர்களிடம் பாலியல் சுகத்தை லஞ்சமாகப் பெற்றதாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிமீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.
கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராம் என்னும் அந்த 53 வயது சிங்கப்பூரர், ஆறு லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.
ஆந்த ஆறு பேரின் குறுகிய கால வருகையாளர் அட்டைக்கான விண்ணப்பத்தை அங்கீகரிப்பதில் கண்ணன் உதவியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அப்போது அவர் ஆணைய அலுவலகத்தில் ஆய்வாளராக வேலை செய்து வந்தார்.
உதவிக்குக் கைம்மாறாக அந்த ஆடவர்களிடம் இருந்து ஆறு பாலியல் செய்கைகளை அவர் லஞ்சமாகப் பெற்றதாகவும் 2022ஆம் ஆண்டிற்கும் 2023 பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் வியாழக்கிழமை (டிசம்பர் 14) நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
$30,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கண்ணன், மீண்டும் 2024 ஜனவரி 11ஆம் தேதி நீதிமன்ற விசாரணைக்குச் செல்லவேண்டும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் $100,000 வரையிலான அபராதமும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப்படலாம்.