சந்திரிகா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி சு.க. அமைச்சர்கள் திட்டம்; திரைமறைவில் பேச்சுகள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்குவதற்கான பேச்சுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இருவர் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை தோன்றினால் அவருக்குப் பதிலாக மாற்று வேட்பாளர் ஒருவரை உருவாக்கும் நோக்கில் இந்த முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுடன் இதற்கான பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்புக் காரணமாக அவர்களால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது இந்த அமைச்சர்களது நிலைப்பாடாக உள்ளது எனவும், அந்தச் சந்தர்ப்பத்தைப் தட்டிப் பறிப்பதன் ஊடாக தமக்கு ஆதரவான ஒருவரை பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் வேட்பாளராகக் களமிறக்க முடியும் எனவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால், பொதுஜன பெரமுனவுடான கருத்து வேறுபாடுகள் காரணமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இதற்கு சம்மதிக்கமாட்டார் என்றே அறியமுடிகின்றது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவது உறுதி என்று ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.