வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம்
வெள்ள நிவாரணத்தை ரொக்கமாகவே வழங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மிக்ஜம் புயல் நிவாரண நிதியை ரொக்கமாக வழங்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு தொடரப்பட்டது.
மிக்ஜம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.6,000 ரொக்கமாக நியாய விலைக் கடைகள் மூலமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர் ராமதாஸ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில், நிவாரணத் தொகையை ரொக்கமாக வழங்கினால் அதிக முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாகவும், வங்கிக் கணக்கில் செலுத்தினால் பிரச்னை இருக்காது என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, வெள்ள நிவாரணம் என்பது உடனடித் தேவை. அதை காலதாமதப்படுத்தாமல் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், நிவாரணம் தகுதியானோருக்கு செல்வதை உறுதி செய்யவும், நிவாரணம் வழங்கியது குறித்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நிவாரணத் தொகை ரூ.6000-ஐ வங்கிக் கணக்கில் செலுத்தக் கோரிய வழக்குகளில் ரொக்கமாகவே வழங்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.