Koose Munisamy Veerappan : வீரப்பன் நல்லவனா, கெட்டவனா? என வாக்குமூலமே சொல்லும் கதை!
“ஒரு கொலைகாரனை வீரன்னு சொல்லக்கூடாது. ஆனால், வீரப்பன் வீரன்தான்” என்று நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் கோபாலின் அறிமுகத்தோடு தொடங்குகிறது ‘கூசு முனிசாமி வீரப்பன்’ என்ற ஆவணத்தொடரின் முதல் பாகம். அவர் வீரனா கொலைகாரனா என்ற கேள்விகளுக்கு அப்பால், வீரப்பன் உருவான கதை, அவரால் பயனடைந்தோர், வீரப்பன் காட்டு ராஜாவாக மாறுவது, வீழ்வது எனப் பல தளங்களை, வீரப்பனின் வாக்குமூலமாகவும் அதன் மீதான கேள்விகளாகவும் பதிவு செய்திருக்கிறது இத்தொடர்.
‘First Blood’ என்கிற முதல் எபிசோடு வீரப்பனின் பால்ய கால வாழ்க்கை, குடும்பம், சொந்த மலைக் கிராமம் போன்றவற்றோடு, பழங்குடிகளுக்கு எதிரான வனச்சட்டங்கள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம், பண்பாட்டோடும், உணவு முறையோடும் தொடர்புடைய வேட்டைத் துப்பாக்கி, அந்த வேட்டைத் துப்பாக்கி எப்படி வீரப்பனின் கைகளில் சேர்கிறது, பிறகு எப்படி அது அதிகாரத்தில் இருக்கும் மக்களின் ஆசைக்காகச் செயல்படுகிறது போன்றவற்றைப் பேசுகிறது. முதன்முதலாக வீரப்பன் திரையில் தோன்றி தன் கதையைப் பேசத் தொடங்குவது பார்வையாளர்களுக்கு புது அனுபவத்தைத் தருகிறது. வீரப்பனின் முதல் கொலை அரசியல் காரணங்களுக்காகத்தான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறது.
‘Into the Wild’ என்கிற இரண்டாம் எபிசோடு எப்படி வேட்டைக்காரன் வீரப்பன் யானைத் தந்தங்களை வெட்டி விற்கும் கொள்ளைக்காரனாகவும் சந்தனக் கடத்தல் மன்னனாகவும் மாறினான் என்பதைப் பேசுகிறது. அவற்றோடு, தலை துண்டாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட டி.எஃப்.ஓ ஸ்ரீனிவாசனின் வருகை மற்றும் அவரின் செயற்பாடுகளைப் பேசுகிறது. இந்த இடத்திலிருந்துதான் இதுவரையில் புழங்கிக்கொண்டிருக்கும் வீரப்பன் கதைகளிலிருந்து வேறுபட்ட பார்வையைத் தொடர் காட்டத்தொடங்கிறது. அந்த மலைக்கிராமங்களில் கோயிலில் சாமியைப் போல வைத்துக் கும்பிடப்படும் ஸ்ரீனிவாசன் ஏன் வீரப்பனால் கொல்லப்படுகிறார், ஸ்ரீனிவாசன் நல்லவரா கெட்டவரா போன்ற கேள்விகளுக்கான பதிலைப் பேசுகிறது இந்த எபிசோடு.
‘Bait Worms’ என்கிற மூன்றாவது எபிசோடு கோபால கிருஷணன் என்ற தமிழ்நாடு காவல்துறை அதிகாரி மலைகிராமங்களில் செய்த அராஜகங்களையும், அதைத் தொடர்ந்து வீரப்பனால் 22 காவலர்கள் கொல்லப்பட்டதையும் பேசுகிறது. ‘ஆடு திருடன்’ என கோபால கிருஷ்ணுக்குப் பெயர் வைக்கிறார் வீரப்பன்.
‘The Hunt for ?’ என்கிற நான்காவது எபிசோடுதான் வீரப்பன் மற்றும் அரசின் அதிகாரக் குரல்களிலிருந்து விலகி, இருமாநில (தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) வனத்துறையாலும் காவல்துறையாலும் அப்பாவி மலைக்கிராம மக்கள் ‘நாஜி வதை முகாம்களுக்கு’ இணையாக ‘ஒர்க் ஷாப்’ என்கிற பெயரில் வதைக்கப்பட்டதைப் பேசுகிறது. அரசின் ஆயுத அமைப்புகளின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டு இந்த எபிசோடு பார்வையாளர்களை உலுக்கி எடுக்கிறது. மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் அமைக்கப்பட்ட ஒர்க் ஷாப்களில் மக்கள் வதைக்கப்பட்டதை விசாரிக்க அமைக்கப்பட்ட ‘சதாசிவம் விசாரணை ஆணையம்’, அவ்வாணையத்தின் அறிக்கை, அதற்கு பின்னான அரசியல் உள்ளிட்டவற்றை ஈது பதிவு செய்கிறது.
‘The War’ என்கிற ஐந்தாவது எபிசோடு காவல்துறை/வனத்துறை மற்றும் வீரப்பனுக்கு இடையில் மாட்டிக்கொண்டு பலியாகும்/கொல்லப்படும் அப்பாவி கிராமத்து மக்களின் கதையைப் பேசுகிறது. வீரப்பனையும் அவனின் கூட்டாளிகளையும் காட்டிக்கொடுப்பவர்கள் வீரப்பனால் கொல்லப்படுவதும், அதற்கு வீரப்பன் கொடுக்கும் ‘விளக்கமும்’ இந்த எபிசோடில் இடம்பெற்றுள்ளன.
‘The Beginning’ என்கிற இறுதி மற்றும் ஆறாவது எபிசோடு வீரப்பனின் அரசியல் பேச்சுகளும், அவை தேர்தலில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும் பேசுகிறது. பிரதானமாக, முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை வீரப்பன் கடுமையாக விமர்சிப்பதையும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மீதான வீரப்பனின் பார்வையையும் பதிவு செய்கிறது. ரஜினிக்கு அவர் கொடுத்திருக்கும் அறிவுரைகள் ரீல்ஸ் லெவலில் டிரெண்டாகலாம். ஒரு கட்டத்தில் பொது மன்னிப்பிற்காக வீரப்பன் தி.மு.க அரசை நாடுவதோடு முடிவடைகிறது தொடர். சீசன் 2-வுக்கான ஒரு சின்ன டீசரோடு இதை முடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராம் குமார் பி.எம் மற்றும் படத்தொகுப்பாளர் ராம் பாண்டியனின் உழைப்பால் தொழில்நுட்ப ரீதியாகக் கச்சிதமாக உருவாகியிருக்கிறது இத்தொடர். முக்கியமாக, பெரும்பாலான காட்சிகளை அதன் அளவுக்கு மீறி இழுக்காமல், கச்சிதமான ‘கட்’களால் விறுவிறுப்பாக்கியிருக்கிறார் படத்தொகுப்பாளர். ஓர் ஆவணத்தொடருக்கான எந்தப் பளுவும் பார்வையாளர்களின் மேல் ஏற்றப்படாமல் சுவாரஸ்யமாகவே உருவாக்கப்பட்டுள்ளது. எக்கச்சக்கமான கதைகளும், தகவல்களும் தொகுக்கப்பட்டிருந்தாலும் எங்குமே சிதறாமல் தொடரின் திரை எழுத்தைத் தந்திருக்கிறது ஜெயசந்திர ஹாஷ்மி, சரத் ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரை உள்ளடக்கிய எழுத்துக்கூட்டணி. அதை நேர்த்தியாக திரையாக்கம் செய்து தொடராக உருமாற்றியிருக்கிறது ஜெயசந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.பி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரை உள்ளடக்கிய ‘உருவாக்கக் குழு’. இவை அனைத்தையும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றிருக்கும் இயக்குநர் சரத் ஜோதிக்கும் பாராட்டுகள்.
வீரப்பனே வந்து கதையைச் சொல்வதால், எளிதிலேயே திரையோடு ஒன்றிவிட முடிகிறது. தொடக்கத்திலேயே வீரப்பனின் அப்பாவித்தனங்கள், சிறுவயது வலி, சேட்டைகள் போன்றவை அவரின் வட்டார வழக்கில் நையாண்டி மணக்கச் சொல்லப்படுகிறது.
தொடக்கத்தில் அவருக்குச் சார்பாகவும் அவரின் வாக்குமூலத்திற்கு வக்காலத்து வாங்கும் வகையிலும் நகரும் தொடர், பிற்பாதியில் அவரைக் கடுமையாகக் கேள்வி கேட்கவும், விமர்சிக்கவும் செய்கிறது. நக்கீரன் கோபால், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், தி இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பத்திரிகையாளர் ஜீவா தங்கவேலு, வழக்கறிஞர் தமயந்தி, திரைக்கலைஞரும் சமூகச் செயற்பாட்டாளருமான ரோகிணி, ஓய்வுபெற்ற டி.ஜி.பி அலெக்சாண்டர் ஐபிஎஸ், நக்கீரனின் முன்னாள் ரிப்போர்டர்கள் ஆகியோரின் தகவல்களும் பார்வைகளும் இதற்கு உதவியிருக்கின்றன.
தொடர் முழுவதுமே கர்நாடக காவல்துறை மற்றும் வனத்துறை பற்றிக் காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், அவர்களின் பார்வையைப் பதிவு செய்யும் வகையில் அத்தரப்பிலிருந்து யாரும் பேச வைக்கப்படவில்லை. மேலும், தொடர் முழுவதுமே பல இடங்களில் நக்கீரன் இதழின் முன்னாள் மற்றும் இன்னாள் பத்திரிகையாளர்களே பேசுகிறார். அதனால், வீரப்பனின் சில வார்த்தைகளுக்கும் கதைகளுக்கும் அவர்களின் விளக்கங்களே பொருளாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தப்படுகிறது. ‘சித்திரிக்கப்பட்ட காட்சிகள்’ சில இடங்களில் கைகூடாமல், கையைக் கடிக்கின்றன. பேசுபொருளை உணர்த்திவிட்ட பிறகும், சில இடங்களில் நீண்டுகொண்டே போகும் ‘சி.க’களில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
வீரப்பன் கூறும் கதைகளும் விளக்கங்களும் குற்றச்சாட்டுகளும் புனைவா, உண்மையா என்பதைத் தாண்டி, சமூகத்தில் அவர் தரப்பு விளக்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இந்த முதல் சீசன் 1996 வரையிலான அவரின் வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்கிறது என்பதால் முழுமையாகத் தொடர் என்ன சொல்ல வருகிறது, யார் பக்கம் நிற்கிறது என்பதெல்லாம் இரண்டாம் சீசனுக்குப் பிறகே தெரிய வரும்.
வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத தகவல்களுடன், அரசின் ஆயுத அமைப்புகளின் கோர முகத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் அழுகையையும் ரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த விதத்தில் வெற்றிபெற்றிருக்கிறது இத்தொடர்.
– அரவிந்த்ராஜ் ரமேஷ்