நாளை முதல் ரூ.6,000 வெள்ள நிவாரணம்.. ரேஷன் கடைகளில் ரொக்க பணம் விநியோகம்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணியை, நாளை (டிச.17) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. வெள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் ரொக்கமாக நிவாரணத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் ரூ.4 லட்சத்தில் இருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தை, ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இதனையடுத்து, நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான, வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், சர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள், வருமான வரி செலுத்துவோர் நியாயவிலைக் கடைக்கு சென்று நேரடியாக விண்ணப்பிக்கலாம். மிக்ஜாம் புயல் நிவாரணத்திற்கான விண்ணப்ப படிவங்கள் நியாயவிலைக் கடைகளுக்கு இன்றே அனுப்பப்பட்டுகின்றன..
அத்துடன், நிவாரணத் தொகைக்கான டோக்கன் வழங்கும் பணி இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்கான பணியில் கூட்டுறவுத் துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் முழுவீச்சில் ஈடுபட உள்ளனர். இதனிடையே, நிவாரணப் பணியில் ஈடுபடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.6,000 நிவாரணம் வழங்கும் பணியை நாளை(டிச.17) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.