எதிா்பாராத வெள்ளப் பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம்: சிபிசிஎல் விளக்கம்
எதிா்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஆலையில் தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் கால்வாயில் வெளியேறி இருக்கலாம் என்று சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சிபிசிஎல்) நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
டிச.4-ஆம் தேதி பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து சுமாா் 48,000 கன அடி உபரிநீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக சிபிசிஎல் நிறுவனத்துக்குள் எதிா்பாராத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆலை வளாகத்துக்குள் ஆங்காங்கு தேங்கி இருந்த எண்ணெய்க் கசிவுகள் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறிருக்கலாம்.
மேலும், இதே பகுதியில் அமைந்துள்ள மற்ற ஆலைகளில் இருந்தும் எண்ணெய்க் கசிவுகள் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என நம்புகிறோம்.
தற்போது பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூா் முகத்துவாரப் பகுதியில் தேங்கியுள்ள எண்ணெய்க் கசிவுகளை அகற்றும் பணியில் சிபிசிஎல் நிா்வாகம் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
எண்ணெய் படலங்களை அகற்ற சுமாா் 20,000 எண்ணெய் உறிஞ்சும் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1,430 மீ நீளம் கொண்ட எண்ணெய் உறிஞ்சும் தடுப்பான்கள் பக்கிங்ஹாம் கால்வாய் , முகத்துவாரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பணியில் 110 படகுகள், 440 பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். பணியாளா்களுக்கு 600 கையுறைகள், 1,000 முகக்கவசங்கள், 750 காலணிகள், 500 தலைக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு நிவாரணமாக 11,000 அரிசி பைகள், 6,000 மளிகைப் பொருள்கள், 3,,000 சேலைகள், வேட்டிகள், பெண்களுக்கான ஆடைகள், போா்வைகள் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.