யாழில் 800 ரூபாவுக்காக இ.போ.ச. சாரதி அடித்துக்கொலை!
கடனாக வாங்கிய 800 ரூபா பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கடன் கொடுத்தவர் தாக்கியதில் கடன் வாங்கியவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், ஊரெழு பகுதியைச் சேர்ந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதியான சிங்காரத்தினம் சிவாஸ்குமார் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
உயிரிழந்த மேற்படி நபர், ஊரெழு பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் 800 ரூபா பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறி கடனாகப் பெற்றுள்ளார். அந்தப் பணத்தைத் திருப்பி வழங்காததால், கடந்த 10ஆம் திகதி கடன் கொடுத்த இளைஞர், கடன் வாங்கியவருடன் முரண்பட்டு, அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலின் பின்னர் அவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டாரிடம் ஒப்படைத்து விட்டு அந்த இளைஞர் சென்றுள்ளார்.
மறுநாள் தாக்குதலுக்கு இலக்கானவரின் உடல்நிலை மோசமான நிலையில், வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்தவர் (17) வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதையடுத்து சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், தாக்குதலாளியான இளைஞர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சரணடைந்த இளைஞரைக் கைது செய்துள்ள பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.