புதிய தலைவர் தெரிவால் தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் பிளவடையாது! – 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்கிறார் சுமந்திரன்.

“புதிய தலைவர் தெரிவால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஒருபோதும் பிளவடையாது. அது கட்சிக்கு மேலும் வலுச் சேர்க்கும். எனக்கு இன்னும் இரண்டு மாதங்களில் 60 வயது. 65 வயதில் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவேன்.”
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் காரைதீவு பொதுச் சபை உறுப்பினர்களின் சந்திப்பு நேற்று (18) திங்கட்கிழமை மாலை காரைதீவு தமிழ் அரசுக் கட்சியின் கிளைத் தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் கட்சியின் கிளைப் பணிமனையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தவராசா கலையரசன், இரா. சாணக்கியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அங்கு சுமந்திரன் எம்.பி. மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஜனநாயக சிறப்பம்சம் கொண்ட கட்சியாகும். இப்படியான தலைவர் தெரிவு இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெற்றால் கட்சி மேலும் வலுப்பெறும் .
எமது கட்சி போன்று எந்தக் கட்சியிலும் ஜனநாயக விழுமியங்கள்இல்லை.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் பொன்னம்பலம் என்பவர் மாத்திரம்தான் தலைவராக வரலாம் .
எனக்கு இரண்டு மாதங்களில் 60 வயது. 65 வயதில் அரசியலில் இருந்து இளைப்பாறி விடுவேன்.
எனக்கு முன்னர் இருந்த தலைவர்கள் விட்ட தவறை நான் ஒருபோதும் விடப் போவதில்லை.
இல் இருந்து நான் சம்பந்தனுடன் சேர்ந்து கட்சி செயற்பாடு அத்தனையிலும் பக்கபலமாக இருந்து வந்திருக்கின்றேன். கட்சி மட்ட பேச்சுகள் அனைத்திலும் பங்குபற்றியுள்ளேன். இந்நிலையில், புதிய தலைவர் தெரிவுக்கு நான் சம்மதம் தெரிவித்துள்ளேன்.
அடுத்த கட்ட தேசிய முயற்சிக்குப் புதிய தலைவரை நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.” – என்றார்.