யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவன் போதை மாத்திரைகளுடன் கைது!

போதை மாத்திரை மற்றும் தடை செய்யப்பட்ட லேகிய பைகளுடன் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட சிங்கள மாணவன் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் இன்று கோண்டாவில் பகுதியில் உள்ள வாடகை அறையில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய கோண்டாவில் ரயில்வே கடவைக்கு அண்மையாக பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியுள்ள வாடகை அறையை முற்றுகையிட்டு சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது 55 தடை செய்யப்பட்ட லேகிய பைகளையும். 11 போதை மாத்திரைகளையும் அவர்கள் கைப்பற்றினர்.
இதேவேளை, இதனை விற்பனை செய்யும் நோக்கில் உடமையில் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 23 வயதான யாழ். பல்கலைக்கழக மூன்றாம் வருட சிங்கள மாணவன் ஒருவரையும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கோப்பாய் பொலிஸார் மேற்படி சிங்கள மாணவனுக்கு எதிராக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.