ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைப்பார் ரணில்! – ஐ.தே.க. நம்பிக்கை.
“அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க, வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் பெற்றுக்கொள்ளாத வாக்குகளைவிட நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதி ஆசனத்தில் அமருவார். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை நான் நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லை.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல்வாதி என்பதற்கு அப்பால் அவர் ஒரு பொருளாதார நிபுணர். அதனால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமாகும்போது பொருளாதார ரீதியில் நாட்டை எந்த இடத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற தெளிவான இலக்கை நோக்கியே தற்போது அவர் பயணிக்கின்றார். அதனால் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது.
வங்குராேத்து நிலையில் இருந்த நாட்டைக் குறுகிய காலத்தில் அதில் இருந்து மீட்பதற்கு ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதேபோன்று கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நாடு எந்த நிலையில் இருந்தது என்பதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள்.
மக்கள் சுதந்திரமாகச் செயற்பட ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வரும் வேலைத்திட்டமே காரணம். நாடு வங்குராேத்து நிலையில் இருந்து மீண்டாலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை. படிப்படியாகவே அதனை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது.
அத்துடன் அடுத்த வருடம் நாட்டில் முக்கியமான இரண்டு தேர்தல்கள் இ்டம்பெறவுள்ளன. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறவுள்ளது.
அதனால் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் அவர், வரலாற்றில் வேறு எந்த ஜனாதிபதியும் பெற்றுக்கொள்ளாத வாக்குகளைவிட நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆசனத்தில் மீண்டும் அமருவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனை நான் நகைச்சுவைக்காகத் தெரிவிக்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்ப ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் தெளிவான திட்டத்தை அடிப்படையாகக்கொண்டே இதனைத் தெரிவிக்கின்றேன்.
அத்துடன் தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கும் எதிர்க்கட்சியும் எங்களுடையது. அதேநேரம் ஜனநாயக முறையில் செயற்படுவதற்கு மக்களால் தெரிவு செய்யப்படும் எதிர்க்கட்சியையு்ம் நாங்கள் பாதுகாக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளர்கள் எனத் தற்போது பலரும் அறிவித்து வந்தாலும் இறுதி நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரு இடத்துக்கு வரும்.” – என்றார்.