அரசியலில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை அறிவித்த சுமந்திரன்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்னும் ஐந்து வருடங்களில் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று (20) இலங்கை தமிழரசு கட்சியின் காரைத்தீவு கிளை அலுவலகத்தில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.
“இரண்டு மாதங்களில் எனக்கு 60 வயதாகிவிடும். 65 வயதில் எனது அனைத்து அரசியல் நடவடிக்கைகளிலிருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன் என்றார் அவர்.
“இன்றைய நாட்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பலரால் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. செய்திகளும் வெளியிடப்படுகின்றன. ஆனால் எங்கள் கட்சிக்கு ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்துவது சிறந்தது என்பது எனது நம்பிக்கை. ”
“மேலும், எங்கள் கட்சியின் தலைவர் தேர்வுக்குப் பிறகு கட்சி வலுவடையும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், கட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்துவது சிறந்தது என்று நான் பரிந்துரைக்கிறேன்.
“எங்களைப் போல எந்தக் கட்சிக்கும் ஜனநாயக மதிப்பு இல்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவராக பொன்னம்பலத்தால் மட்டுமே முடியும். எங்கள் கட்சியில் அப்படி ஒரு அமைப்பு இல்லை.
இன்னும் இரண்டு மாதங்களில் எனக்கு 60 வயதாகிவிடும். 65 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். என் முன்னோடிகளின் தவறுகளை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்” என்றார் அவர்.