அயோத்தியில் தமிழிலும் அறிவிப்பு பலகைகள்!
ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மொழிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், அயோத்தியில் ராம ஜென்மபூமியில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுவருகிறது. மூலவா் ராமா் சிலை ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அதையொட்டி நாடு முழுவதிலுமிருந்து மதத் தலைவா்கள், பிரபலங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அயோத்தி வரவுள்ளனா்.
இந்த நிலையில், அயோத்தியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக லக்னெள மண்டல காவல்துறை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
“ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவின் போது அயோத்தியில் பக்தர்கள் பெருமளவு சாலைகளில் பாதயாத்திரையாக வருவார்கள் என்பதால், போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படும். சில சாலைகளில் ஆட்டோக்களுக்கும் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அயோத்திக்கு வரவுள்ளதால், அவர்களின் வசதிக்காக நகரின் பல்வேறு இடங்களில் வழிகாட்டிப் பலகைகளும், அறிவிப்பு பலகைகளும் வைக்கப்படவுள்ளது.
ஹிந்தி, ஆங்கில மொழிகளுடன் நாட்டில் அதிகமாக பேசக்கூடிய தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்படவுள்ளது.” என்று காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.