இந்திய அணி சாதனை.. தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றது.!
இந்தியா தென்னாப்பிரிக்காவுக்கு இடையே நடைபெற்று வரும் ஒருநாள் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகள் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தொடரை யார் வெல்வது என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டாஸ்ஸில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த வருடத்தில் இந்திய அணி விளையாடும் கடைசி ஒருநாள் போட்டியான, இந்த போட்டியில், ருத்ராஜ் மற்றும் குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரராக ரஜத் படிதார் இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தனர்.
தொடக்க வீரராக இறங்கிய ரஜத் படிதார், ஒரு சிக்சர் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 22 ரன்களில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான சாய் சுதர்சன் 10 ரன்களில் வெளியேற, சஞ்சு சாம்சன் மற்றும் கேப்டன் கே.எல் ராகுல் நிதானமான ஆட்டத்தை தொடர்ந்தனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், கே.எல் ராகுல் 21 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த திலக் வர்மா, சஞ்சு சம்சனுடன் இணைந்து நிதானமாகவும், பொறுப்புடனும் விளையாடி ஒருநாள் போட்டியில் தனது முதல் அரை சதத்தை கடந்தார். சிறப்பாக விளையாடி வந்த திலக் வர்மா, இந்திய அணியின் ஸ்கோர் 217 இருக்கும்போது 52 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன், ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். சதம் அடித்த சஞ்சு சாம்சன் 108 ரண்களில் ஆட்டம் இழக்க, ரிங்கு சிங் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இறுதியில் அதிரடியாக விளையாடி இந்தியனின் ஸ்கோரை உயர்த்தினர். ரிங்கு சிங்கின் அதிரடியான 38 ரன்கள் உதவியால் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எட்டியது. தென்னாப்பிரிக்கா அணி சார்பில் பியூரன் ஹென்ட்ரிக்ஸ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய, ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி ஜோர்ஜி ஜோடி, நிதானமாக இலக்கை நோக்கி விளையாடியது. தென்னாபிரிக்கா அணியின் ஸ்கோர் 59-ஆக இருக்கும்போது ரீசா ஹென்ட்ரிக்ஸ் அர்ஷ்தீப் சிங் வந்து வீட்டில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ராஸ்ஸி வான் டெர் டுசென், அக்சர் பட்டேலின் சுழலில் இரண்டு இடங்களில் ஆட்டம் இழந்தார்.
பொறுப்புடன் விளையாடி வந்த டோனி டி ஜோர்ஜி மற்றும் கேப்டன் ஐடன் மார்க்ராம் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்த ஜோடியை, வாஷிங்டன் சுந்தர் தனது சிறப்பான பந்துவீச்சால் ஐடன் மார்க்ராம் விக்கெட்டை வீழ்த்தி பிரித்தார். சிறப்பாக விளையாடி வந்த டோனி டி ஜோர்ஜி, சென்ற போட்டியில் போலவே சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 81 ரண்களில் அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
அவேஷ் கான் பந்து வீச்சில் ஹென்ரிச் கிளாசென் சாய் சுதர்சனின் சிறப்பான கேட்ச் செய்ய ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வியான் முல்டர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் ஆட்டமிழந்தனர்.
192 ரன்களுக்கு ஆறு விக்கெட் என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா அணி, மேலும் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் டேவிட் மில்லர் உட்பட அனைவரும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி 218 ரண்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இரண்டு விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் முகேஷ் குமார் ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடத்தில் விளையாடிய கடைசி ஒரு நாள்போட்டியில் வெற்றி பெற்றும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை வென்றும் இந்த வருடத்தை வெற்றிகரமாக ஒரு நாள்போட்டி தொடரை முடித்துள்ளது.
இந்த வெற்றியானது இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்த வருடத்தில் கிடைத்த 27வது ஒருநாள் போட்டியின் வெற்றியாகும். இதன் மூலம் ஓராண்டில், ஒருநாள் போட்டியில் அதிகம் வெற்றி கிடைத்த சிறப்பான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு அமைந்துள்ளது. ஓராண்டில் ஒருநாள் போட்டியில் 2003ஆம் ஆண்டு, 30 போட்டிகளை வென்று ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 27 போட்டிகளை வென்ற இந்திய அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.