அயோத்தி சிலை பிரதிஷ்டை: சோனியா காந்தி, மன்மோகன் சிங்குக்கு அழைப்பு!
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ள காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலின் கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், சிலை பிரதிஷ்டை நிகழ்வில் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, ரத்தன் டாடா, கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்பட 3,000 விவிஐபிக்களுக்கு அழைப்பிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து கோயில் டிரஸ்டின் தலைவர் அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருவதால் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும் அவரது வீட்டுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் தேவ கெளடா, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த நிகழ்வில் சோனியா காந்தி அல்லது காங்கிரஸ் தரப்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.