பாலியல் வன்கொடுமை செய்தால் இனி மரணத் தண்டனை; 3 மசோதக்கள் நிறைவேற்றம்
மத்திய அரசு உருவாக்கியுள்ள புதிய 3 குற்றவியல் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. தற்போது நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 புதிய மசோதாக்கள் புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், வியாழன்கிழமையன்று மாநிலங்களவையில் இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்திய தண்டனைச்சட்டம், சிஆர்பிசி மற்றும் சாட்சிய சட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சன்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் என இந்த புதிய மசோதாக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களின் தண்டனைகளை கடுமையாக்கும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு ஆயுள் அல்லது மரண தண்டனை வழங்க புதிய சட்டங்கள் வகை செய்கின்றன.
இதேபோல் பயங்கரவாதம், வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்குகளில் தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆயுள் அல்லது மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதாவில் அம்சங்கள் இடம்பிடித்துள்ளன.
ஆங்கிலேயர் காலத்து மனநிலையை மாற்றும் வகையில் வரலாற்றில் முதன் முறையாக இந்திய குற்றவியல் சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். புதிய சட்ட மசோதாக்களுக்கு எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் காலத்து சட்டங்களுக்கு விடை கொடுக்கப் பட்டுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டங்களைப்போலவே தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிப்பது தொடர்பான மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. புதிய நடைமுறைப்படி பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நாடாளுமன்றத்தின் மக்களவையை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக நேற்று காங்கிரஸ் எம்பிகள் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனால் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்பிகளின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது. பல்வேறு அமளிகளுக்கு மத்தியில் நடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திட்டமிட்டதைவிட ஒரு நாள் முன்னதாகவே முடித்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிகள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இந்தியா கூட்டணியினர் சார்பில் இன்று(வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. டெல்லியில் ஜந்தர் மந்தரில் இந்தியா கூட்டணியில் உள்ள எம்பிகள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் இந்த போராட்டம் வேறொரு தேதியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.