மியான்மாரில் இணைய அடிமைகளாகப் பயன்படுத்தப்படும் இலங்கையர்களை மீட்க முயற்சி.
மியான்மாரில் பயங்கரவாதக் குழுவினால் இணைய அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் இலங்கையர்களின் குழுவை மீட்கும் பணியில் மியான்மார் தூதுவர் ஈடுபட்டுள்ளார்!
மியான்மாரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்காக பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மியான்மார் உள்துறை அமைச்சரின் ஒப்புதலுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
மியான்மாரில் தாய்லாந்து எல்லையில் உள்ள சைபர் கிரிமினல் பகுதியில் 56 இலங்கை இளைஞர்கள் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்தது.
மியாவெட்டி நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்தப் பகுதி முற்றிலும் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க இலங்கை தூதரகம் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவும், இராணுவமும், அந்நாட்டு அரசாங்கமும் ஏற்கனவே சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளின் இளைஞர்கள் கூட இணைய அடிமைகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகள் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை விடுவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளன.
கடந்த மாதம் பயங்கரவாதக் குழுவின் சாரதி ஒருவரை தாக்கி , நான்கு இளைஞர்களும் யுவதிகளும் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் உதவியுடன் மீண்டு இலங்கைக்கு செல்ல முடிந்தது.
தமது நேரடித் தலையீட்டினால் முன்னதாக 37 பேர் காப்பாற்றப்பட்டதாக தூதுவர் குறிப்பிட்டார்.
தூதுவரின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தைப் பயன்படுத்தி சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தூதுவர் ஜானக பண்டா மேலும் தெரிவித்தார்.