ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம் யாழில் நாளை கலந்துரையாடல்.

‘ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“ஒரு மனிதநேய சிவில் செயற்பாட்டு அமைப்பு என்ற வகையில் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினராகிய நாம், எமது சக மனிதநேயப் பற்றாளர்களான மக்கள் நலன் சார்ந்த அனைத்துத் தரப்பினர்களினதும் மனமிசைந்த ஒத்துழைப்புடன், 28 ஆண்டு காலமாகத் தொடர் சிறை வைக்கப்பட்டுள்ள 14 தமிழ் அரசியல் கைதிகளினதும் மனிதாபிமான விடுதலையை வலியுறுத்திய செயற்கரும செய்தி ஒன்றை பொதுவெளியூடாக நாட்டின் ஜனாதிபதியிடம் கொண்டு சேர்க்கும் காலக் கடமையொன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எனவே, இந்தக் கருணைப் பணி குறித்த இலக்கை எய்துவதற்கு சமூக நேசங்கொண்ட அனைவரும் தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பைத் தந்துதவ வேண்டுமென அன்புரிமையுடன் திறந்த பொது வேண்டுகோளை விடுப்பது தொடர்பாகவும், அதனை எவ்வடிவத்தில் நடைமுறைச் சாத்தியப்படுத்துவது எனவும் அவசரமாகக் கலந்துரையாடவேண்டியுள்ளது.
ஆகவே, இந்த விடயம் தொடர்பாக நாளை நடைபெறும் கலந்துரையாடலில் அனைவரும் பங்கேற்று தமது ஒத்திசைவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.