உதயநிதி நாக்கை அடக்கணும் – கொந்தளித்த நிர்மலா சீதாராமன்
தமிழகத்தில் மழை வெள்ளத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கான மீட்பு பணிக்காக, மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கோரியிருந்தது. அப்போது அது பற்றிய பேசிய அமைச்சர் உதயநிதி, மக்களின் பணத்தைத்தான் தாங்கள் கேட்பதாகவும், அவர்கள் அப்பன் வீட்டு பணத்தைக் கேட்கவில்லை எனவும் கூறியிருந்தார். அதனால் அமைச்சர் உதயநிதியின் அப்பேச்சு சர்ச்சையானது.
இந்நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக அமைந்துள்ளது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேச்சு. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேசினார். பின்னர் உதயநிதியின் கருத்துக்கு பதில் அளித்த அவர், “அப்பன் வீட்டு சொத்தா என கேள்வி கேட்பவரை, அப்பன் வீட்டு சொத்தை வைத்துக்கொண்டு பதவியை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாரா என கேட்க முடியுமா?” என கேள்வி எழுப்பினார்.
“அவர்கள் பாஷை எப்போதும் அப்படித்தான் இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கத்தானே செய்கிறோம். அப்பன் வீடு… ஆத்தா வா.. போன்ற பேச்சுகள், அரசியலில் முன்னுக்கு வரவேண்டும் என நினைக்கும் அவருக்கு நல்லதல்ல. அவரின் தாத்தா எப்பேர்ப்பட்ட தமிழறிஞர்” எனவும் கூறினார்.
மேலும், “ வகிக்கும் பதவிக்கு ஏற்ற அளவுக்கு வார்த்தைகள் அளந்து வரவேண்டும். இதை பொதுவாகவே சொல்கிறேன்; அவர்மீது எந்த காழ்ப்புணர்வுடனும் இதை கூறவில்லை” என்றார்.