தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர்!
சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக ஓட்டுநர்களுக்கு இலவச தேநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வருகின்ற ஜனவரி 1 முதல் 7-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வுகளை போக்குவரத்து துறை மேற்கொள்ளும்.
அந்த வகையில், ஒடிசாவில் வாகன ஓட்டுநர்களுக்கு இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று போக்குவரத்து துறையினர் அறிவித்துள்ளனர்.
ஒடிசாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பேருந்து, லாரி போன்ற வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு இன்றுமுதல் ஜனவரி 7-ஆம் தேதி வரை இலவசமாக தேநீர் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர்கள் சோர்வடையும் அதிகாலை 3 மணிமுதல் காலை 6 மணி வரை நெடுஞ்சாலை அருகில் உள்ள கடைகளில் தேநீர் வழங்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கும் தலா ரூ. 5,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஒடிசா அரசின் இந்த புதிய முயற்சியை வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.