2040-க்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்ப திட்டம்: இஸ்ரோ தலைவா்
2040-ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு, இந்தியாவிலிருந்து முதல்முறையாக விண்வெளி வீரா்கள் அனுப்பப்படுவாா்கள் என இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்தாா்.
நிலவின் தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக நிகழாண்டு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றியைத் தொடா்ந்து அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
ககன்யான் திட்டம்:
‘மனோரமா இயா்புக் 2024’ பொதுஅறிவுத் தகவல் களஞ்சியம் கடந்த வாரம் வெளியானது. அதில் இஸ்ரோ தலைவா் சோமநாத் எழுதிய கட்டுரையில், ‘விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக விண்ணுக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் 2 முதல் 3 வீரா்கள் கொண்ட குழு பூமியின் தாழ்வட்ட பாதையில் 3 நாள்கள் பயணிக்க உள்ளனா். பயணம் முடித்து அவா்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதற்காக தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்கள் பெங்களூரில் உள்ள விண்வெளி வீரா்கள் பயிற்சி மையத்தில் பயிற்சிபெற்று வருகின்றனா்.
ஆதித்யா எல்-1:
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக இந்தியாவிலிருந்து கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் 5 ஆண்டுகள் செயல்முறையில் இருக்கும். பூமியிலிருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயிண்ட் (எல்-1) எனும் பகுதியில் ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி மாதம் நிலைநிறுத்தப்படவுள்ளது. அங்கிருந்தே சூரியனின் வெப்பச்சுழல், காந்தப்புலன் உள்ளிட்டவைகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
தேசிய விண்வெளி தினம்:
நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திராயன்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா் தரையிறக்கப்பட்டது. இது இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். அதனை பறைசாற்றும் விதமாக நிலவில் லேண்டா் தரையிறங்கிய ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.
இஸ்ரோவின் எதிா்காலத் திட்டங்கள்:
வெள்ளி, செவ்வாய் போன்ற கிரகங்களில் ஆய்வு மேற்கொள்வதற்கான விண்கலங்கள் விரைவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 2035-க்குள் இந்தியாவுக்கான பிரத்யேக விண்வெளி மையம் அமைக்க பிரதமரால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 2040-க்குள் இந்தியாவிலிருந்து முதல்முறையாக நிலவுக்கு விண்வெளி வீரா்களை அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.
இஸ்ரோவின் இந்த சீரிய முன்னெடுப்புகளால் சா்வதேச அளவில் தேசத்தின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தியாவின் வளா்ச்சி தொடா்ந்து மேம்பட்டு வருகிறது’ என குறிப்பிட்டாா்.