மலையக மக்களுக்கு நியாயத்தை வழங்குவதற்கான காலம் உதயம்! – சஜித் தெரிவிப்பு.
“மலையக மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது. பேசியது போதும் செயல் வடிவமே தற்போது எமக்கு அவசியமாக உள்ளது.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் “200 இல் மலையகம் மாற்றத்தை நோக்கி” எனும் தொனிப்பொருளில் நுவரெலியாவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மலையக மக்களின் 200 ஆண்டு சிறப்புமிக்க வரலாற்றையும் பரிசுத்தமான பாரம்பரியத்தையும் வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமையில் கொண்டாடும் இந்த நிகழ்வுக்கு எனது பாராட்டுக்களை முதலில் தெரிவித்துக்கொள்கின்றேன்.
உண்மையில் கூறப்போனால் மிகவும் துன்பகரமான வாழ்க்கையை வாழ்ந்து இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியைத் தேடித் தந்து பலம் சேர்க்கும் மலையக மக்களுக்கு மனப்பூர்வமான நன்றிகளையும் கௌரவத்தையும் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இலங்கையில் வாழும் அனைவரும் சமமானவர்கள். சமமான முறையில் அனைத்து பிரஜைகளையும் கவனிக்க வேண்டும் என்று எமது அரசமைப்பில் கூறப்பட்டுள்ளது. அரசமைப்பில் அவ்வாறு கூறப்பட்டாலும், யதார்த்தத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய அந்தஸ்து, மரியாதை, பலம் இன்னமும் கிடைக்கவில்லை என்பதே எனது கருத்தாகும்.
மலையக மக்களுக்கான பிரஜாவுரிமையை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவே வழங்கினார் என்பதை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
எதிர்காலத்தில் அமையப்போகும் எமது ஆட்சியிலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்தே தீருவோம் என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
விசேடமாக, மலையக மக்களை தொழிலாளர் பிரஜைகளாகவே அடையாளப்படுத்துகின்றனர். எனினும், மலையக மக்கள் தொழிலாளர்களாகவே இருக்காமல், தேயிலை உற்பத்தி துறையின் தொழில் முயற்சியாண்மை உடையவர்களாகவே நாம் அடையாளம் காண்கின்றோம்.
அதுவும் சாதாரண முயற்சியாண்மை உடையவர்களாக அன்றி, தனக்கென சொந்தமான காணியில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் புரட்சியை எமது ஆட்சியின் முதல் நாளில் இருந்தே ஆரம்பிப்போம்.
லயன் அறையில் வாழ்க்கையை நடத்திகொண்டும், குறைந்தளவிலான கல்வி மற்றும் சுகாதார வசதிகளை கொண்டும் மிகவும் கஷ்டமான துயர வாழ்க்கையை மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
மலையக மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது. பேசியது போதும் செயல் வடிவமே தற்போது எமக்கு அவசியமாக உள்ளது.
எமது ஆட்சியின் முதலாவது காலப்பகுதியில் காணி உரித்துரிமையை கொண்ட, பொருளாதார பலம் கொண்ட, கல்வி மற்றும் சுகாதார வசதிகளை பெற்ற, அனைத்திலும் இயலுமையை கொண்ட, கௌரவமான வாழ்க்கையை மலையக மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கான பயணத்தை ரணசிங்க பிரேமதாஸவின் நாமத்தின் கீழ் ஆரம்பித்து செய்து காட்டுவோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூற விரும்புகின்றேன்.
வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் 200 வருட சிறப்புமிக்க வரலாற்றைக் கொண்டாடும் இவ்வேளையில், எமது ஆட்சி வருவதற்கு முன்னர் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு மலையக மக்களுக்காக மூச்சு (ஹுஸ்ம) மற்றும் பிரபஞ்சம் (சக்வல) திட்டங்களின் ஊடாக பாடசாலைகளைக் கட்டியெழுப்பி, சுகாதாரத் துறையின் பிரச்சினை தீர்த்து மலையக மக்களின் உரிமைகளைப் பலப்படுத்துவோம் என்ற உறுதியை வழங்கி எனது பேச்சை நிறைவு செய்கின்றேன்.” – என்றார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சிவஞானம் சிறிதரன், எம்.வேலு குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.