பள்ளிகளிலும் சாதி பாகுபாடுகளா?அதிர வைக்கும் தகவல்கள்
பட்டியலின தலைவர்களை தரையில் அமரவைப்பது தொடங்கி, பட்டியலினத்தோர் கோயிலில் நுழைய எதிர்ப்பு தெரிவிப்பது வரை, தமிழ்நாட்டில் அன்றாடம் சாதிக் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இதன் தொடர்ச்சியாகவே, பள்ளிகளில் பட்டியலின சமையலர் சமைத்த உணவை சாப்பிட மறுப்பதும், ஆயுதம் ஏந்தி சக மாணவர்கள் மீதே கொடூர தாக்குதல் நடத்துவதும் நடக்கின்றன. பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 36 மாவட்டங்களில் உள்ள, 321 அரசு பள்ளிகள், 58 அரசு உதவிபெறும் பள்ளிகள், 62 தனியார் பள்ளிகள் என 441 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஆய்வில், 38 பள்ளிகளில் மாணவர்கள் சாதி பெருமை பேசுவதும், ராமநாதபுரம், கடலூர், திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், 25 பள்ளிகளில் சாதி மோதல்கள் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 பள்ளிகளில் மாணவர்கள் சாதி உணர்வை வெளிப்படுத்துவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 பள்ளிகளில் பட்டியலின மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 பள்ளிகளில் வரிசையில் நிற்பதில் மாணவர்களிடையே சாதிபாகுபாடு இருப்பதாகவும், 4 பள்ளிகளில் சாதிவாரியாக அமர்ந்து உணவருந்துவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
3 பள்ளிகளில் தவறிழைத்தால் பட்டியலின மாணவர்களுக்கு கூடுதல் தண்டனை வழங்குவதும், பட்டியலின மாணவர்களை தொடக்கூடாது எனக் கருதும் மாணவர்கள் உள்ள பள்ளி ஒன்று குறித்தும், பட்டியலின மாணவர் முதல் மதிப்பெண் எடுத்ததால் பாராட்டு விழாவையே ரத்து செய்த பள்ளி குறித்தும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களில் சாதிப் பெருமை ஸ்டிக்கர் ஒட்டுவது, குறிப்பிட்ட வண்ணத்தில் கையில் கயிறு கட்டுவது, பொட்டு வைப்பது, கடுக்கன் போடுவது உள்ளிட்ட சாதி அடையாளங்கள் மாணவர்களிடைய காணப்படுவதாகவும், அவற்றின் பின்னால், திரைப்படங்களின் தாக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆசிரியர்களே தீண்டாமை கொடுமைக்கு உள்ளாவது தெரியவந்துள்ள நிலையில், பல பள்ளிகளில் மாணவிகள் தாங்கள் பாதுகாப்பற்ற நிலையில் கல்வி பயில்வதாக உணர்வதாகவும் கூறியுள்ளனர்.
பெற்றோர் மற்றும் ஆசிரியர் மூலமாகவே பாகுபாடுகள் மாணவர்களுக்கும் கடத்தப்படுவதாக கூறும் கல்வியாளர்கள், உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் ஒதுங்கி கொள்வதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்
மாணவர்களிடையே தீண்டாமையை ஒருபோதும் ஏற்க முடியாது என கூறியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இதில் அரசு மெத்தனமாக இருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள நீதியரசர் சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் தற்போதைய சூழலில் பொருத்தமானது எனக்கூறும் கல்வியாளர்கள், மாணவர்களிடையே சாதிய பாகுபாட்டை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.