வீடு எப்ப விழும்னே தெரியல.. அரசு உதவணும் – மாற்றுத்திறனாளி தம்பதி
எல்லாம் இருந்தும் குறை கூறும் மனிதனர்களுக்கு மத்தியில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாற்றுத்திறனாளி தம்பதியை, வெள்ளம் நிற்கதியாக நிற்கவைத்துள்ள சம்பவத்தின் கதையை, இல்லை.. இல்லை.. அவர்களின் வாழ்வையும் வெள்ளம் ஏற்படுத்திய பாதிப்பையும்தான் படிக்கப்போகிறீர்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து – அடைக்கம்மை தம்பதி, இயல்பிலேயே இருவரும் பார்வை மாற்றுத்திறனாளிகள். ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவற்றை சுமந்து நடையாய் நடந்து பல்வேறு பகுதிகளுக்கு சென்று விற்பனை செய்து அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்தனர். ஆனால், இவர்களின் வாழ்வையே அடியோடு புரட்டி போட்டுவிட்டது தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத அதிகனமழையும் வாரிசுருட்டிய பெருவெள்ளமும்.
இருவருமே பார்வை மாற்றுத்திறனாளிகள் என்பதால், என்ன நடக்கிறதென்றே தெரியாமல் இருந்துள்ளனர். அடித்து துவைத்த அதிகனமழையில் வீடு சேதம் அடைந்திருப்பதையும் உணரவில்லை. இடிந்து விழுந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்த பிறகே இருவருக்கும் தெரிந்துள்ளது. அருகே இருந்தவர்களும் மனித நேயத்தோடு இருவரையும் மீட்டும் தங்கள் வீட்டில் தங்கவைத்துள்ளனர்.
இருவரும் வசித்த ஓட்டு வீடு ஏற்கெனவே சிதிலமடைந்திருந்த நிலையில், தொடர் மழைக்கு முற்றிலும் சேதம் அடைந்து காணப்படுகிறது. எப்போது இடிந்து விழும் என தெரியாத நிலையில், அந்த வீட்டிலேயே இருவரும் வசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாடகை வீடு எடுத்து வேறு வீட்டில் தங்கும் அளவுக்கு வசதியற்ற தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் அடைக்கம்மை.
அக்கம் பக்கத்தினர் சொன்ன பிறகுதான் மழையின் கோரத்தையே தங்களால் புரிந்துகொள்ள முடிந்ததாக கூறும் மாரிமுத்து, மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஊதுபத்தி தொழிலும் பெரியளவில் எடுபடாது என்கிறார். அரசு வீடு கட்டி கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என மாரிமுத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மாற்றுத்திறனாளி தம்பதியின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் செவி சாய்க்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.
எல்லாருக்கும் வாழ்க்கை அத்தனை எளிதல்ல.. முடிந்தவரை பிறருக்கு உதவி வாழ்வதே அறம்.