டெங்கு நோயினால் அனுமதிக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவி மருந்து ஒவ்வாமையால் மரணம்!
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவி, வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக நேற்று (24) உயிரிழந்துள்ளார் என தடயவியல் மருத்துவர் வெளிப்படையான தீர்ப்பு வழங்கியுள்ளார்!
குணரட்ணம் சுபீனா என்ற 25 வயதுடைய மாணவி பல நாட்களாக காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் வழங்கப்பட்ட மருந்துகளினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் பிரேத பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது மரணத்திற்கான காரணத்தை முழுமையாக கண்டறிய முடியாததால், அவரது உடலின் உள் பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் வெளிப்படையான தீர்ப்பை வழங்கியுள்ளதால், அனைத்து விசாரணைகளின் பின்னர் அவரது சடலத்தை இறுதிக் கிரியைகளுக்காக குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.