செங்கடலில் 4 வானூர்திகளைச் சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.
செங்கடலின் தெற்குப் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நான்கு வானூர்திகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளிலிருந்து சனிக்கிழமையன்று அந்த வானூர்திகள் பாய்ச்சப்பட்டதாக அமெரிக்க மத்திய ஆணையம் (சென்ட்காம்) குறிப்பிட்டது.
“இவை, அக்டோபர் மாதம் 17ஆம் தேதியிலிருந்து வர்த்தகக் கடற்பாதையில் ஹூதி மேற்கொண்ட 14, 15வது தாக்குதல்கள் ஆகும்,” என்று சென்ட்காம் எக்ஸ் சமூக ஊடகத்தில் பதிவிட்டது.
இதற்கிடையே, செங்கடலில் 25 இந்திய ஊழியர்களைக் கொண்ட கச்சா எண்ணெய்க் கப்பல் ஹூதி மேற்கொண்ட வானூர்தித் தாக்குதலுக்கு உள்ளானதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்தது. மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கபோன் நாட்டைச் சேர்ந்த எம்வி சாய்பாபா என்ற அந்தக் கப்பலில் இருந்தோர் யாரும் காயமடையவில்லை என்று சென்ட்காம் சமூக ஊடகத்தில் குறிப்பிட்டது.
இந்தியக் கடலோரப் பகுதியிலிருந்த வேறொரு எண்ணெய்க் கப்பல்மீது ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டதால் அக்கப்பலில் தீப்பற்றியதாகவும் முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் ஏஎன்ஐ செய்தி தெரிவித்தது.
கச்சா எண்ணெய்யை ஏற்றியிருந்த அக்கப்பல் மங்களூரிலிருந்து சவூதி அரேபியாவிலுள்ள ஒரு துறைமுகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்பட்டது.
குஜராத் மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியான வெராவல்லில் இருந்து 20 கடல்மைல் தொலைவில் சனிக்கிழமை (டிசம்பர் 23) அத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இதனையடுத்து, இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் உதவிக்கு விரைந்தன.
“கடலோரக் காவல்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்றும் அனுப்பப்பட்டது. கப்பலுக்கு மேலே சென்ற அவ்விமானம், கப்பலும் அதன் ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியது,” என்று கடற்படை அதிகாரி ஒருவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்தியக் கடற்படைப் போர்க்கப்பல் ஒன்றும் உதவிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இத்தாக்குதல் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருவதாகத் தெரிவித்த பிரிட்டிஷ் ராணுவத்தின் கடல்துறை வணிகச் செயல்பாட்டுப் பிரிவு, கப்பலில் பற்றிய தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டது.
இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த ஓர் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே, எம்வி கெம் புளூட்டோ என்ற அக்கப்பல் ஜப்பானுக்குச் சொந்தமானது என்றும் அதனைத் தாக்கிய ஆளில்லா வானூர்தி ஈரானிலிருந்து அனுப்பப்பட்டது என்றும் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆனால், சரக்குக் கப்பல்கள்மீது ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்தும் தாக்குதல்களில் ஈரானுக்குப் பங்குள்ளது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவுத் துணை அமைச்சர் அலி பகேரி மறுத்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களே தங்களது சொந்த முடிவுகளின் அடிப்படையில் தாக்குதல்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.