தமிழகத்தில் 4 பேருக்கு ஜே.என்.-1 கொரோனா.. கர்நாடகாவில் பாதிப்பு 34ஆக உயர்வு!
தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு JN1 என்ற புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடகாவில் பாதிப்பு எண்ணிக்கை 34 ஆக உள்ளது.
இந்தியாவில் ஜேஎன்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் நான்கு பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகே தெரிய வரும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வகையில் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. அம்மாநிலத்தில் 34 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 20 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய வகை கொரோனா வீரியம் குறைந்தது எனவும் எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், சலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும், கொரோனாவின் போது அளிக்கப்பட்ட அதே முறையில் சிகிச்சை அளிக்கப்படும். மக்கள் கை கழுவதல், முகக்கவசம் அணிதல், கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்துகின்றனர்.