பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ கொடுத்த எச்சரிக்கை!
செய்முறைத் தேர்வு விவகாரத்தில் விதிகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.
10 மற்றும் 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ செய்முறை பொதுத்தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே செய்முறை பொதுத்தேர்வுக்கான விதிமுறைகளை மத்திய இடைநிலை கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன்படி செய்முறை தேர்வுக்கான உபகரணங்கள், ஆய்வகம் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும், உரிய நேரத்தில் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி செய்முறை தேர்வு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்பதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இதனை பின்பற்றாத பள்ளிகளில் நடைபெறும் செய்முறை தேர்வு ரத்து செய்யப்படும் என்றும், தற்போது கொடுக்கப்பட்டுள்ள தேதிகளை காட்டிலும் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படாது என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.