டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; உயிரிழப்பும் திடீரென உயர்வு.
இலங்கையில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரத்தால் அதிகரித்துள்ளது.
கடந்த வருடம் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடத்தில் இதுவரையில் 85 ஆயிரத்து 636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, இந்த ஆண்டில் இதுவரை 50 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் திடீரென அதிகரித்துள்ளது.
டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 மாத ஆண் குழந்தையொன்று நேற்று உயிரிழந்துள்ளது.
இந்த மாதத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் வேகமாக அதிகரித்துள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் உலகளவில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.