இலங்கையில் அமைதி நிலவ அரசியல் தீர்வு மிக அவசியம்! விரைவில் விடைபெறும் நியூசிலாந்து தூதுவர் சம்பந்தனை நேரில் சந்தித்தபோது தெரிவிப்பு.
இலங்கையில் அமைதி ஏற்பட – மக்கள் சுதந்திரமாக வாழ அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும்.”
இவ்வாறு இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் வலியுறுத்தினார்.
இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை அவரது கொழும்பு இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
இதன்போதே நியூசிலாந்து தூதுவர் மேற்கண்டவாறு கூறினார் என்று சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கைக்கான தூதுவர் பதவியிலிருந்து விரைவில் விடைபெறவுள்ள நியூசிலாந்து தூதுவர் மைக்கல் அப்பிள்டன் இன்று காலை என்னைச் சந்தித்தார். இது நல்ல சந்திப்பு. இதன்போது பல முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசினோம்.
அதிலும் முக்கியமாக அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினோம். இலங்கையில் அமைதியையும், நீதியையும் ஏற்படுத்தும் வகையில் நியாயமான – நிலையான அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்றும், அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும் என்றும் அவரிடம் நான் கூறினேன்.
அதேவேளை, சர்வதேச ஒப்பந்தங்கள், சர்வதேச வாக்குறுதிகள் மற்றும் ஐ.நா. தீர்மானங்களை இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் அவரிடம் நான் தெரிவித்தேன்.
தமிழ்பேசும் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீளிணைக்கப்பட வேண்டும் என்பதையும் அவரிடம் எடுத்துரைத்தேன்.
இவை தொடர்பில் இலங்கை அரசுக்கு நியூசிலாந்து உள்ளிட்ட அனைத்து வெளிநாடுகளும் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தினேன்.
வடக்கு – கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால மற்றும் குறுகிய காலப் பிரச்சினைகள் தொடர்பிலும் அவரிடம் தெளிவுபடுத்தினேன்.
எனது கருத்துக்களை நியூசிலாந்து தூதுவர் ஏற்றுக்கொண்டார். தமது நாட்டில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது என்றும், அங்கு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றார்கள் என்றும் கூறிய நியூசிலாந்து தூதுவர், அதே நிலைமை இலங்கையிலும் ஏற்பட வேண்டும் என்று தமது நாட்டு அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார். இலங்கையில் அமைதி ஏற்பட அரசியல் தீர்வு கட்டாயம் காணப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். வடக்கு, கிழக்குக்குத் தான் நேரில் விஜயம் செய்து பல தரப்பினரையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் என்னிடம் கூறினார். இலங்கைக்கும், இங்கு வாழும் அனைத்து இன மக்களுக்கும் நியூசிலாந்து தொடர்ந்தும் உதவும் என்றும் அவர் உறுதியளித்தார்.” – என்று சம்பந்தன் எம்.பி. குறிப்பிட்டார்.