சூர்யா சென்னையை மையமாகக் கொண்ட புதிய கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியிருக்கிறார்.
ஐ.பி.எல் பாணியிலான டி20 ப்ரீமியர் லீக் போட்டிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பெரிய வியாபாரமாக மாறி நிற்கிறது. டி20 ப்ரீமியர் லீகுகளை கடந்து இன்னும் சுவாரஸ்யமானத் தொடர்களை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உலகம் முழுவதும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்தில் ‘The Hundred’ என்ற பெயரில் 100 பந்துகளைக் கொண்ட கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் T10 என்ற பெயரில் 10 ஓவர்களுக்கான கிரிக்கெட் தொடர் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பாணியில்தான் இந்தியாவிலும் T10 கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தும் பொருட்டு ISPL T10 என்ற தொடரை CCS Sports LLP எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
ISPL என்பதற்கு Indian Street Premier League என்பது விரிவாக்கம். ஸ்டார் ப்ளேயர்கள் அல்லாமல் உள்ளூர் அளவில் நல்ல திறமையோடு வெளிச்சம் பெறாமல் உதவி வேண்டி நிற்கும் வீரர்களைத் தேர்வு செய்து இந்தத் தொடரை நடத்தவிருக்கின்றனர். இந்தத் தொடருக்கான அறிமுக நிகழ்வு ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தது.
இந்தத் தொடரின் ஆலோசகராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டிருக்கிறார். ரவி சாஸ்திரி இந்தத் தொடரைப் பற்றிக் கூறுகையில், “கிரிக்கெட் கனவோடு ஓடிக்கொண்டிருக்கும் பலருக்கும் வெளிச்சம் தரக்கூடிய தொடராக இந்த ISPL அமையும். உள்ளூர் அளவில் திறமையாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கும் இந்தத் தொடரின் ஏற்பாட்டாளர்களுக்குப் பாராட்டுகள். இந்தத் தொடரின் மூலம் வெளிச்சம் பெற்று வரப்போகும் வீரர்களின் வெற்றிக் கதைகளைக் கேட்க ஆவலாக உள்ளேன்.” என ரவிசாஸ்திரி பேசியிருக்கிறார்.
வழக்கமான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில்தான் இந்தத் தொடரும் நடைபெறும். ஆனால், இந்தத் தொடரில் டென்னிஸ் பந்து மட்டுமே பயன்படுத்தப்படும். வருகிற மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரை மொத்தம் 19 போட்டிகள் நடைபெறவிருக்கிறது.
மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூர், கொல்கத்தா, ஸ்ரீநகதர் என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன.