தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்(71) உடல்நலக் குறைவால் இன்று(டிச., 28 ) காலமானார். இருதினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவில் கேப்டன் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேமுதிக., கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாகவே விஜயகாந்த் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் பொதுவெளியில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
மூச்சு திணறல் காரணமாக, இம்மாதம் துவக்கத்தில் சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சில நாட்கள் தொடர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். நேற்று முன்தினம் மாலை மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அதே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை தான் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மருத்துவர்கள் அவரை காப்பாற்ற தீவிர சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது.
விஜயகாந்த் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட உள்ளது.