சபரிமலை மண்டல பூஜை: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று ஐயப்பனை தரிசனம் செய்தனா்.
கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, 453 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை ஐயப்பனுக்கு அணிவித்தாா். இதையடுத்து, களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் நாகலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன், கேரள மாநில தேவசம் அமைச்சா் கே.ராதாகிருஷ்ணன், திருவிதாங்கூா் தேவசம் வாரியம் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சபரிமலை செல்லும் பாதையிலும் கோயில் சந்நிதானத்திலும் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த வசதிகள் குறித்து ஆளுநா் இல.கணேசன் பாராட்டு தெரிவித்தாா்.
மகர விளக்கு பூஜையொட்டி கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், அவா்களுக்குத் தேவையான சிறப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் இது தொடா்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என மாநில தேவசம் அமைச்சா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
மீண்டும் திறப்பு: மண்டல பூஜையைத் தொடா்ந்து, கோயிலின் நடை புதன்கிழமை சாத்தப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக டிசம்பா் 30-ஆம் தேதி கோயில் நடை மீண்டும் திறக்கப்படும். முக்கிய நிகழ்வான மகர விளக்கு பூஜை ஜனவரி 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
கடந்த டிச.25-ஆம் தேதி வரை 31,43,163 பக்தா்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அளித்த காணிக்கை மற்றும் பிரசாத விற்பனை மூலம் ரூ.241.71 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.18.72 கோடி அதிகம் என கோயில் நிா்வாகம் புதன்கிழமை தெரிவித்தது.
இரு தமிழக பக்தா்கள் உயிரிழப்பு:
செங்கன்னூரில் பம்பை நதியில் குளித்தபோது சென்னையைச் சோ்ந்த இரு பக்தா்கள் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். அவா்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.