அமெரிக்க வீதி விபத்து : கிறிஸ்துமஸ் கொண்டாடச் சென்ற 6 இந்தியர்கள் உயிரிழப்பு.
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்திற்குக் கிறிஸ்துமஸ் கொண்டாடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்தியர்கள் 6 பேர் அங்கு நடந்த சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்தக் குடும்பத்தினர் ஆந்திரப் பிரதேசத்தின் அமலாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது..
உயிரிழந்தவர்கள் ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வெங்கட சதீஷ் குமாரின் உறவினர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜான்சன் வட்டாரத்திலுள்ள ஃபோர்ட்வொர்த் அருகே சிறிய வேனும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோசமாக மோதிக் கொண்டன. அந்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாயினர்.
ஜார்ஜியாவைச் சேர்ந்த அந்த குடும்பத்தினர் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாட டெக்சஸ் சென்றிருந்தனர். அங்குள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடினர். பின்னர் அங்குள்ள உயிரியல் பூங்காவிற்குச் சென்றுவிட்டு திரும்பிய போது, ஒரு கனரக வாகனம் ஒன்று அவர்கள் வந்த சிறிய வேன் மீது மோதியது.
இந்த விபத்தில், சிறிய வேனில் பயணம் செய்த பி. நாகேஸ்வர ராவ் (64 வயது), சீதா மகாலட்சுமி பொன்னாடா (60 வயது), நிஷிதா (9 வயதுச் சிறுமி), நவீனா (36 வயது), கிருத்திக் (10 வயதுச் சிறுவன்) ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த ஆறாவது ஆளின் பெயர் வெளியிடப்படவில்லை.
அந்த வேனில் பயணம் சென்றவர்களில் லேகேஷ் என்பவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். அவர் ஃபோர்ட் வொர்த் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கனரக வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் பொன்னாட வெங்கட சதீஷ் குமார், “எங்க மாமாவும் அவருடைய குடும்பத்தினரும் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கொண்டாடுவதற்காக அட்லாண்டா நகருக்குச் சென்றிருந்தனர்.
“பின்னர் டிசம்பர் 26ஆம் தேதி உயிரியல் பூங்காவுக்குச் சென்ற அவர்கள் மாலை 4 மணிக்கு திரும்பினர். அப்போது எதிரே ஒரு கனரக வாகனம் ஒன்று, தவறான திசையில் வந்ததால் அந்த மோசமான விபத்து நிகழ்ந்தது.
“மேலும் அங்குள்ள வடஅமெரிக்க தெலுங்கு சங்கத்தைச் சேர்ந்த அசோக் மற்றும் ஸ்ரீகாந்த் இதுகுறித்து தங்களுக்கு உதவி வருகின்றனர்,” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.