வசதி படைத்தவர்களிடம் திருடி ஏழைகளுக்கு உதவிய திருடன் கைது
தெலங்கானா மாநிலத்தில் வசதி படைத்தவர்களின் வீடுகளில் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவிய நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். ஜென்டில்மேன் பட பாணியில் நடந்த இந்த திருட்டில் ஈடுபட்ட திருடனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். பீகாரிலிருந்து, ஹைதராபாத் வந்து கொள்ளையை அரங்கேற்றியவர் சிக்கியது எப்படி?
பீகார் மாநிலம் கர்ஹா அருகே உள்ள ஜோகியா கிராமத்தை சேர்ந்தவர் முகமது இர்ஃபான். 33 வயதான இர்ஃபான் டெல்லி, ஐதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் வசதியானவர்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பீகாரில் தனது சொந்த ஊரில் வசிக்கும் ஏழைகளுக்கு செலவு செய்து வந்தார்.
ஏழைகள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மருத்துவம், கல்வி போன்ற தேவைகளுக்கு தாரளமாக பணம் கொடுத்து உதவியுள்ளார். இதுவரை டெல்லியில் நான்கு வீடுகளிலும், ஹைதராபாத்தில் நான்கு வீடுகளிலும், பெங்களூரில் ஏழு வீடுகளிலும் இர்பான் கொள்ளை அடித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த எட்டாம் தேதி கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பீகாரில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்த இர்பான், லக்சிகாப்பூல் பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கியுள்ளார் அங்கிருந்து கொள்ளையடிப்பதற்காக எம்எல்ஏ ஹாஸ்டல் பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு பாதுகாப்பு அதிகம் இருந்ததால், அருகில் உள்ள அரசு ஊழியரான அனுராதா ரெட்டி என்பவர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார் அங்கிருந்து 5 சவரன் தங்க சங்கிலியை திருடிக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
வழக்கம்போல் பீகாரருக்கு சென்று அந்த தங்க சங்கிலியை விற்று ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் ஆகியோருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார் இர்பான். இந்நிலையில் தனது வீட்டில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து அனுராதா ரெட்டி லக்சிகாப்பூல் போலீசாரிடம் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி குற்றவாளியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். சிசிடிவியில் இர்பான் குறித்து எந்தத் தகவலும் தெரியவராத நிலையில், மனம் தளராத போலீசார் ஹைதராபாத்தின் பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இர்பானை அடையாளம் கண்டனர்.
இந்நிலையில் மீண்டும் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் லக்சிகாப்பூல் பகுதிக்கே இர்பான் வந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரை தீவிரமாக கண்காணித்து பிடித்த போலீசார் அவரிடமிருந்து கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூட்ரைவர், கத்தி, ஸ்பேனர் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.