மக்கள் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்தக்கூடிய நபரே தமிழரசுக் கட்சியின் தலைவராக வர வேண்டும் – வடமராட்சியில் சாணக்கியன் (Video)
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளைச் சர்வதேச மட்டத்துக்கு எடுத்துச் செல்லக் கூடிய வல்லமைமிக்க நபரே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்குப் பொருத்தமானவர் என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28) செய்தியாளர்களைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழரசுக் கட்சி என்பது ஜனநாயகக் கட்சி. அதன் தலைமைத்துவம் ஜனநாயக ரீதியிலேயே தெரிவு செய்யப்படும்.
கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழரசுக் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.
கட்சியின் தலைவராக வர வேண்டியவர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை சர்வதேச அளவுக்கு எடுத்துச் செல்லக்கூடிய சர்வதேச தொடர்பகள் உள்ள நபராக இருந்தால் மட்டுமே சாத்தியம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் ஊடாகவே அரசியல் தீர்வு காண முடியும். அதற்காகவே தமிழரசுக் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தநிலையில், அரசியல் சாசனம் தொடர்பில் அதீத அறிவு உள்ள நபரே தமிழரசுக் கட்சியின் தலைவராக வர வேண்டும்.
அதிகாரப் பகிர்வினூடாக மட்டுமே எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக வடக்கில் இருக்கின்றார். அவரால் அவருடைய துறை சம்பந்தமான பிரச்சினையை மட்டுமே கையாள முடியும்.
ஏனைய பிரச்சினைகளை எவ்வாறு அவரால் தீர்க்க முடியும்? ஆகவே, எங்களுக்கு அதிகாரங்கள் கிடைத்தால் நாங்களே எங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.
அரசியல் தீர்வுக்காகவே எங்கள் கட்சி செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆகவே, அரசியல் சம்பந்தமாக பரந்த அறிவு ஆழமாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தெரிந்த ஒருவர்தான் கட்சியின் தலைவராக வர முடியும்.
கட்சியின் தலைவராக வருபவருக்குச் சர்வதேச தொடர்புகள் இருந்தால்தான் மாற்றங்களைச் செய்ய முடியும். அத்தோடு இலங்கை அரசுக்கு அழுத்தங்களையும் கொடுக்க முடியும்.
மொழி மட்டும் சர்வதேச தொடர்பில் ஆதிக்கம் செலுத்துவதில்லை. விடயங்களும் தெரிந்திருக்க வேண்டும். அதன் மூலமாக நாங்கள் ஆதரவை எடுத்து நடைமுறைப்படுத்துவதும் முக்கியமாகும். இந்த இரண்டு தகுதிகளும் கட்சியின் தலைவருக்கு அவசியமாகும்.
அவ்வாறான தகுதி என்னிடம் இருந்தால் நானே தலைவர் பதவிக்கு குதித்து விடுவேன். இன்னும் 5 அல்லது 10 வருடங்களில் எனக்கும் அந்தத் தகுதி வரலாம்.
நான் எனது பெயரை ஏன் கொடுக்கவில்லை என்றால், எனக்குத் தகுதி இன்னும் வரவில்லை. நான் இன்னும் கற்றுக்கொண்டு இருக்கின்றேன். எனவே, தமிழரசுக் கட்சியின் தலைவராக யார் வர வேண்டும் என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் தனது கட்சியின் தலைவரைத் தெரிவு செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் கிடைத்துள்ளது. எங்களுடைய கட்சி எங்கள் பிரதேசத்தில் பிளவுபடாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கட்சிக்குள் நடக்கும் விடயம் கட்சிக்குள் பிளவு என்பது அல்ல. எனவே, அனைவரும் நிலைமைகளைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும்.” – என்றார்.