அயோத்தி கோயில் சிலை பிரதிஷ்டை: சோனியா, காா்கே பங்கேற்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு: காங்கிரஸ்
அயோத்தி ஸ்ரீ ராமா் கோயிலின் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என அக்கட்சி பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ராம ஜென்மபூமி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பைத் தொடா்ந்து, அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கோயிலின் தரைதள பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூலவரான குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலை வரும் ஜன. 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
பிரதமா் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் இந்த சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்க அரசியல், திரைத்துறை, கலை எனப் பல்வேறு தரப்பினருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் சாா்பில் இந்நிகழ்வில் கலந்து கொள்ள, அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி, மக்களவைக் குழு தலைவா் அதிா் ரஞ்சன் சௌத்ரி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய காங்கிரஸ் பொதுச் செயலா் (ஊடகப் பிரிவு) ஜெய்ராம் ரமேஷ் மேலும் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, காா்கேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அவா்கள் பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு, தகவல் தெரிவிக்கப்படும்’ என்றாா்.