புதிய தண்டவாளத்தில் சோதனை ஓட்டம்: ரயில் மோதி 2 மாணவிகள் உயிரிழப்பு; விசாரணைக்கு அமைச்சா் உத்தரவு
மத்திய பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சோதனைக்காக இயக்கப்பட்ட ரயில் மோதி இரு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடா்பாக விசாரணை நடத்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. கைலோத் ஹலா பகுதியில் 10-ஆம் வகுப்பு மாணவிகள் இருவா் புதிய தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி உயிரிழந்தனா். முதலில் ஒரு வழித்தடமாக இருந்த இந்த இடம் அண்மையில் இரு வழித்தடமாக மாற்றப்பட்டது. புதிய தடத்தில் சோதனை ஓட்டம் இரு நாள்களாக நடைபெற வருகிறது. புதிய தண்டவாளத்தை ரயில் பரிசோதனை முறையில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்கக் கூடாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்று அதிகாரிகள் கூறினா்.
இந்த நிலையில், மாணவிகள் இருவரும் மாலை நேரத்தில் டியூஷன் படிப்பு முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது ரயில் மோதி இறந்தனா். இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்பகுதி எம்எல்ஏவும் மாநில அமைச்சருமான துளசிராம் சிலாவத், இது தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டாா்.