ரணில் சிறந்த உலகத் தலைவர்! – வஜிர புகழாரம்.
“அமெரிக்கா, ரஷ்யா என்பன பெரிய நாடுகளாக இருக்கலாம். ஆனால் புடின், ஜோ பைடன் ஆகியோரை விடவும் சிறந்த தலைவர்தான் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் மட்டுமே இலங்கைக்குப் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“அனைவரும் ஒன்றிணைவோம் என ஜனாதிபதி தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகின்றார். நாம் பிளவுபட்டு நின்றால்தான் வெளிநாட்டு சக்திகள் நாட்டுக்குள் நுழையும். அரசியல் கட்சிகள் மற்றும் இடதுசாரிகள் தேசிய ஒற்றுமைக்காக ஒன்றிணைய வேண்டும். அப்போது ஜனாதிபதியால் பொருளாதார சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
நாம் பிரிந்து நின்றால் நாடு விழும். நாட்டை நிர்வகிக்ககூடிய சிறந்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க என்பதால்தான் நாம் அவர் பின்னால் நிற்கின்றோம்.
அமெரிக்க ஜனாதிபதி பைடன், ரஷ்யா ஜனாதிபதி புடின் ஆகியோரை விடவும் ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர் என நான் குறிப்பிட்டிருந்தேன். ஆம். புடின் 1999 இல்தான் அரசியலுக்கு வந்தார். நாடுகள் பெரிதாக இருக்கலாம், சொத்துக்கள் இருக்கலாம். பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், எமது நாட்டுத் தலைவருடன் ஒப்பிட முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் செல்லும்போது, அவர் ஜனாதிபதி ஆவார் என கூறினோம். மறுநாள் எனக்குப் பைத்தியம் என்றார்கள். நடந்தது என்ன? ஏனெனில் ரணிலின் நகர்வுகள் எமக்குத் தெரியும்.” – என்றார்.