ஆணைக்குழுக்கள் ஏமாற்று நாடகமே! சர்வதேசமே புதிய வருடத்திலாவது நீதியை வழங்கு!! – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்.

https://we.tl/t-PJQEAap0wv

வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று காலை இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கருத்துத் தெரிவிக்கையில்,

“சர்வதேச நீதிக்காகப் போராடி வரும் நாம் பல வருடங்கள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்றத்துக்குள்ளாகி வருகின்றோம். அத்துடன் இலங்கை அரசின் ஆணைக்குழுக்கள் மீதும் அதன் விசாரணைகள் மீதும் நாம் முற்றாக நம்பிக்கை இழந்துள்ளோம். இந்த நாட்டில் உள்ளவர்களே போரை உருவாக்கி தமிழர்களை அழித்தார்கள். எனவே, அவர்களால் உருவாக்கப்படும் ஆணைக்குழுக்கள் மீதும் அலுவலகங்கள் மீதும் எமக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.

இழப்பீடு வழங்குவதும், மரணச் சான்றிதழ் வழங்குவதுமே அவர்களது நோக்கமாக உள்ளது. எமக்கு அது தேவையில்லை. எமது உறவுகளே தேவை. 12 ஆணைக்குழுக்களுக்கு மேல் அமைத்து விட்டார்கள். அனைத்துமே ஏமாற்று நாடகம். எனவே, பிறக்கின்ற புதிய வருடத்திலாவது எமக்கான நீதியை வழங்குவதற்குச் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்.” – என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “12 ஆணைக்குழுக்களுக்கு மேல் ஏமாற்று நாடகம், ராஜபக்ஷ குடும்பம் பேரக் குழுந்தைகளைக் கொஞ்சி மகிழும் போது நாம் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் நிற்கின்றோம், குடும்பங்களாகச் சரணடைந்தபோது அவர்களுடன் சரணடைந்த 29 குழந்தைகள் எங்கே?” என எழுதப்பட்ட அரசுக்கு எதிரான பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.