பதில் பொலிஸ்மா அதிபர் தென்னக்கோனுக்கு எதிராக 4 மனுக்கள்.
தேசபந்து தென்னக்கோன் பதில் பொலிஸ்மா அதிபராகச் செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ்மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் காலிமுகத்திடல் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின்போது மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கோன் தனது கடமைகளை மீறியிருந்தார் என்று மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னக்கோன் செயற்பட்ட காலத்தில், காலிமுகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் முக்கிய துறையைக் கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாகச் செயற்பட்ட ஒருவருக்கு இந்தப் பொறுப்பை வழங்குவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என்றும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.