இண்டிகோ விமான உணவில் ‘புழு’: விசாரணைக்கு உத்தரவு
இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட ‘சாண்ட்விச்’ உணவில் புழு இருந்தது குறித்து பெண் பயணி விடியோ ஆதாரத்துடன் புகாா் அளித்தாா். இதற்கு மன்னிப்பு கோரியுள்ள விமான நிறுவனம், விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் இருந்து மும்பைக்கு சென்ற விமானத்தில் வெள்ளிக்கிழமை பயணம் செய்த குஷ்பு குப்தாவுக்கு பரிமாறப்பட்ட சாண்ட்விச்சில் உயிருடன் புழு இருப்பதை விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டாா்.
சாண்ட்விச்சில் புழு இருப்பது குறித்து விமானப் பணியாளா்களிடம் புகாா் அளித்த பின்பும் மற்ற பயணிகளுக்கு சாண்ட்விச் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டது என்றும் அவா் புகாரில் குறிப்பிட்டிருந்தாா். இந்த விடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள இண்டிகோ விமான நிறுவனம், இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது என்றும், சாண்ட்விச்சை வழங்கும் உணவு விநியோக நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்றும் வருங்காலங்களில் இதுபோன்ற நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.