‘டீல்’ பேசி நாடு திரும்பிய கைப்பிள்ளையே கஜேந்திரன்! – டக்ளஸ் சாடல்.
விடுதலைப்புலிகளிடம் 40 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று வெளிநாடு சென்றுவிட்டு, பின்னர் ஜனாதிபதியுடனும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடனும் டீல் பேசி நாட்டுக்குள் வந்த கைப்பிள்ளை கஜேந்திரன், மக்களை உசுப்பேற்றி சுயலாப அரசியல் செய்கின்றார் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
வவுனியாவுக்கு நேற்று விஜயம் செய்த அவர், கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ், தானாகவே கைப்பிள்ளை கஜேந்திரன் எம்.பி. தொடர்பாகக் கேளுங்கள் எனக் கூறி தானாகவே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அந்தக் காலத்தில் கைப்பிள்ளை கஜேந்திரன், 40 ஆயிரம் சவப்பெட்டிகளைத் தயார் செய்யுங்கள் என்று நாடாளுமன்றில் கூறினார். அந்த விடயம் சிங்கள மக்களிடத்திலும், ஆயுதம் தரித்தவர்கள் மத்தியிலும் ஒரு கொதிநிலையை ஏற்ப்படுத்தக்கூடியது. அவர் அவ்வாறு கூறிவிட்டு வெளிநாடு சென்று விட்டார்.
பின்னர் அந்தக் காலப்பகுதியில் பதவி வகித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியுடன் டீல் பேசினார். தன்னிடம் பல இரகசியங்கள் இருக்கின்றன, அதனை நான் சொல்லுகின்றேன், எனது சகோதரரை விடுவியுங்கள் என்று அவர் கோரினார். பின்னரே அவர் இலங்கை வந்தார்.
அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக புலிகள் அமைப்பில் வாகனங்களுக்குப் பொறுப்பாக இருந்த குட்டி என்பவர் நாடாளுமன்றில் அவருக்குக் கொடுத்த வாகனத்தைத் தருமாறு கேட்டிருந்தார். அதற்கு 40 இலட்சம் ரூபா பணத்தை நாடாளுமன்றத்துக்குச் செலுத்தினாலேயே அந்த வாகனத்தை எடுக்க முடியும் என்று கைப்பிள்ளை கூற குட்டி என்பவர் அந்தப் பணத்தை அனுப்பியிருந்தார்.
அந்தப் பணத்தையும் கைப்பிள்ளை எடுத்துக்கொண்டு வாகனத்தைப் பூட்டி விட்ட பின்னரே வெளிநாடு சென்றார். பின்னர் மீண்டும் இங்கு வந்து மணற்தரை என்ற பகுதியில் காணி வாங்கி வீடு கட்டி வசதியாக இருக்கின்றார். இவர்கள் மக்களுடைய நலன்களையும் கருத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறானவர்கள் மக்களுக்குத் தவறான வழிகாட்டுதல்களை வழங்கி மக்களை உசுப்பேற்றுகின்றார்கள். இவை ஆரோக்கியமான விடயமல்ல.
இதேநேரம் எங்களுக்குப் பயந்தே வெளிநாடு ஓடியதாக அண்மையில் அவர் கூறியிருந்தார். இன்று நான் இருக்கின்றேன். ஆனால், அவர் யாருக்குப் பயத்தில் ஓடினாரோ அவர்கள் இன்று இல்லை. இன்று புலிகள் இல்லை; நான் இருக்கின்றேன். அப்படியானால் யாருக்குப் பயந்து அவர் ஓடியிருக்க முடியும்.?
அந்தக் காலகட்டத்தில் வெலிக்கடை சிறையில் சிங்களக் காடையர்களாலும், களுத்துறை சிறையில் தமிழ் காடையர்களாலும் நான் தாக்கப்பட்டேன். ஆனால், நானும் திரும்பித் தாக்கினேனே தவிர நாட்டைவிட்டு ஓடவில்லை.
ஆனால், இந்தக் கைப்பிள்ளை திருகோணமலை மக்களை உசுப்பேற்றி குழப்பினார். அந்த மக்கள் அடிச்சுத் துரத்தியபோது ஓடியதை அனைவரும் வீடியோவில் பார்த்திருப்பீர்கள். அவர் கோழை போல் ஓடினார். அவர் திரும்பத் தாக்கியிருக்க வேண்டும். அந்தச் சம்பவத்துக்கு மனம் வருத்துகின்றேன். ஆனால், அவர் மீண்டும் தாக்கியிருக்கவேண்டும். அதற்கு முதுகெலும்பில்லாத தைரியம் இல்லாதவர்கள் இன்று சகட்டுமேனிக்கு ஏதோ பேசுகின்றனர்.” – என்றார்.