சமூக காவல் குழுக்களை வலுப்படுத்த கனடாவின் ஆதரவு : நிஷான் துரையப்பா
கனடாவின் பீல் பிராந்திய காவல்துறைத் தலைவர் நிஷான் துரையப்பா, நாட்டில் சமூகப் பொலிஸ் குழுக்களை மேலும் வலுப்படுத்துவதற்கு ஆதரவை வழங்குவதற்கு பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உடன்பட்டுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிஷான் துரையப்பா, அமைச்சர் டிரான் அலஸை சந்தித்து அவருடனான விசேட கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதியை வழங்கியதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இக்கலந்துரையாடலில் இரு நாடுகளினதும் பாதுகாப்பு தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், இந்நாட்டின் சமூக பொலிஸ் பிரிவுகளை வலுப்படுத்தும் வேலைத்திட்டம் கனேடிய பொலிஸ் மா அதிபரிடமிருந்து விசேட பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
1973ஆம் ஆண்டு இலங்கையில் பிறந்த நிஷான் துரையப்பா, 1975ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேயரான அல்பிரட் துரையப்பாவின் மருமகனாவார். கனடாவின் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
இலங்கையில் பிறந்த நிஷான் துரையப்பா தற்போது கனேடிய பீல் பிராந்திய பொலிஸ் சேவையின் தலைவராக கடமையாற்றுவது இலங்கைக்கும் பெருமையளிப்பதாக அமைச்சர் டிரான் அலஸ் இங்கு குறிப்பிட்டுள்ளார்.
பொலிஸ் தலைமையகத்தை வந்தடைந்த நிஷான் துரையப்பாவிற்கு விசேட பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டதுடன், விஜயத்தை நினைவு கூறும் வகையில் விசேட நினைவு பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.