மணிப்பூரில் மீண்டும் வன்முறை… 4 பேர் உயிரிழப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் திடீர் தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே 3ஆம் தேதி மோதல் கலவரமானது. பல்வேறு கொடூர சம்பவங்களுக்கு பிறகு மாநிலத்தில் மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தில் மீண்டும் வன்முறைச் சம்பவம் நடந்துள்ளது. தலைநகர் இம்பாலில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள லில்லாங் பகுதியில் ராணுவ உடையில் சென்ற சிலர் அங்கிருந்த பொதுமக்களை மிரட்டி பண வசூலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அவர்களோடு வாக்குவாதம் செய்தவர்களை அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 5 பேர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அடையாளம் தெரியாத கும்பல் வந்த வாகனங்களை தீவைத்து எரித்துள்ளனர்.
இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். வன்முறையைத் தொடர்ந்து தௌபால், இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் ஆகிய 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.