கேஜரிவால் இன்று கைது? வீட்டுக்கு வெளியே போலீஸ் குவிப்பு
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டுக்கு வெளியே போலீஸ் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு இதுவரை மூன்று முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால், அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம்சாட்டி நேரில் ஆஜராகவில்லை.
இதற்கிடையே தில்லி அமைச்சர் அதிஷி எக்ஸ் தளத்தில், “அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு அரவிந்த் கேஜரிவால் நாளை கைதாக வாய்ப்புள்ளது.” என்று நேற்று இரவு பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், அரவிந்த் கேஜரிவால் வீட்டுக்கு வெளியே அதிகளவிலான போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், அவரது வீட்டுக்குச் செல்லும் சாலைகளை தடுப்புகள் வைத்து அடைத்த காவல்துறையினர், அவரது அலுவலக பணியாளர்கள் உள்பட யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.