யாழில் போராட்டத்தையடுத்துத் தாமதமாகி வந்த ஜனாதிபதி! மூவர் கைது!! – கச்சேரியில் கூட்டம் ஆரம்பம்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக இன்று பிற்பகல் தொடக்கம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பஸ்ஸில் ஏற்றப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள நிலையில், யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரைப் பிரயோகிக்கும் வாகனங்கள், கலகமடக்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்துக்குக் ஹெலியில் வருகை தரும் ஜனாதிபதி மாலை 3 மணியிலிருந்து 5.30 மணி வரை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெறும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், எதிர்ப்புப் போராட்டத்தையடுத்து ஜனாதிபதி மாலை 4.10 மணிக்குத்தான் அதிவிசேட பாதுகாப்புடன் யாழ். மாவட்ட செயலகத்துக்குள் நுழைந்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் பழைய பூங்காவுக்கு அருகிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.