அமைச்சரை ஆளுநர் நீக்க முடியாது: உச்சநீதிமன்றம்
அமைச்சரவை பரிந்துரையின்படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்; அமைச்சரை பதவியிலிருந்து ஆளுநர் நீக்க முடியாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கும் உத்தரவை நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரரும், வழக்குரைஞருமான எம்.எல். ரவி, “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 29}ஆம் தேதி நீக்கி தமிழக ஆளுநர் உத்தரவிட்டார். அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தின்படி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். அதன்பிறகு அன்றையே தினமே ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டார். அவரது பதவியின்படி, அவர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற முடியாது’ என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் முதல்வர்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறது என்றனர். அதற்கு வழக்குரைஞர் எம்.எல். ரவி கூறுகையில், “இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் முடிவு எடுக்குமாறு உயர்நீதிமன்றம் கூறிய பிறகும் எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை’ என்றார்.
அப்போது, நீதிபதிகள், “அமைச்சரை பதவியில் இருந்து ஆளுநர் நீக்கம் செய்ய முடியாது என்றும், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியிருப்பதில் சரி என்பதற்கு முகாந்திரம் உள்ளது’ என்றனர்.
மேலும், “மனுதாரரின் வாதங்கள் நேரில் கேட்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் கேள்விக்குரிய உத்தரவையும் ஆய்வு செய்தோம். உயர்நீதிமன்றத்தின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆகவே, அரசமைப்பின் 136}ஆவது பிரிவின் கீழ் எந்தத் தலையீடும் தேவைப்படவில்லை’ என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. இதையடுத்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 136 என்பது மேல்முறையீட்டு மனுக்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் விருப்புரிமை அதிகாரங்களைக் குறிப்பிடுவதாகும்.
முன்னதாக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டுள்ளார். அவரது நீதிமன்றக் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவரது இலாகா வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
இதனிடையே , அவர் எந்தத் தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
அதேபோன்று, செந்தில் பாலாஜி இலாகா இல்லாமல் அமைச்சராக பதவியைத் தொடர்வதற்கும், அவரை பதவிநீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்குரைஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்குகளை கடந்த செப்டம்பர் மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறியதுடன், அமைச்சரவையில் செந்தில் பாலாஜி நீடிக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டது.
மேலும், “இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அல்லது எந்தச் சட்டத்தின் கீழ் எந்தத் தகுதியிழப்பும் ஏற்படவில்லை என்றாலும், அமைச்சராகப் பதவி வகிக்கும் ஒருவரை ஆளுநரால் ஒருதலைப்பட்சமாக தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பதும் விவாதப் பொருளாக இருக்கும்’ என்றும் உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் எம்.எல். ரவி தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.