“20” ஒரு வரலாற்று வாசிப்பு – கருணாகரன்
ஒரு தடவை விக்ரர் ஐவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது ஐவன் சொன்னார், “இலங்கை மக்கள் எப்போதும் மாற்றத்தை விரும்புகின்றவர்கள். அதற்காக தங்களை அர்ப்பணித்துச் செயற்படுகின்றவர்கள்” என.
இதற்கு அவர் சில உதாரணங்களையும் சொன்னார். “1971 இல் ஜே.வி.பியின் போராட்டம் என்பது மாற்றத்துக்கானது. அதைப்போல 1988, 89 இல் மேற்கொள்ளப்பட்ட ஜே.வி.பியின் இரண்டாவது கிளர்ச்சியும் மாற்றத்துக்கான ஒரு முயற்சியே. இவற்றில் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தத் தூண்டலை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழர்களும் தங்களுடைய தளத்தில் மாற்றங்களுக்காக முயற்சித்திருக்கிறார்கள்.
ஒன்று இலங்கை அரசின் போக்கிற்கு மாற்றாக.
இரண்டாவது தமிழ் அரசியற் தலைமைத்துவத்துக்கும் அதன் போக்குக்கும் மாற்றாக.
இதைப்போல 1994 இல் யு.என்.பியின் பதினேழு ஆண்டுகால அதிகாரத்துக்கு எதிராக திருமதி சந்திரிகா குமாரதுங்கவைத் தலைமையாக ஏற்றுக் கொண்டு மாற்றமொன்றுக்காக வாக்களித்தனர் மக்கள். இன்னொரு மாற்றத்துக்காக 2015 இல் நல்லாட்சிக்கான அரசாங்கத்துக்கு வாக்களித்தார்கள். இதில் பிந்திய இரண்டும் முக்கியமானவை. ஏனென்றால் இவை இரண்டும் ஆயுத முனையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அல்ல. ஜனநாயக ரீதியிலானவை. அதிலும் இந்த நாட்டிலுள்ள இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். நடந்தவற்றுக்குப் பரிகாரம் காண வேண்டும் என்ற அடிப்படையில் வெளிப்படையாகவே இதைச் சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்கப்பட்டது. மக்களும் இதற்கு தங்களுடைய சம்மதத்தை வழங்கினார்கள். 1994 இல் சந்திரிகா குமாரதுங்கவுக்கு 68 வீதமான மக்களின் ஆதரவு கிடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்துக்கு தமிழ், சிங்கள, மலையக, முஸ்லிம் சமூகங்கள் அனைத்தும் ஒன்றாக ஆதரவை வழங்கியிருந்தார்கள்”.
ஐவனின் இந்தக் கூற்று மறுக்க முடியாதது. இதில் நிறைந்திருக்கும் உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று இதைக் குறித்து ஆழமான வாசிப்புச் செய்யப்படுவது அவசியம். அதுவொரு கால நிபந்தனையாகும். ஏனெனில் ஒவ்வொரு சமூகங்களுக்கிடையிலும் ஒவ்வொரு சமூகத்தினரிடையேயும் இப்பொழுது விளைந்து போயிருக்கும் அரசியல் தப்பபிப்பராயங்களுக்கு இவற்றினுள்ளே செறிந்து கிடக்கின்ற உண்மைகள் பல விடயங்களைப் புரிந்து கொள்ள வைக்கும்.
மாற்றத்துக்கான மக்களுடைய முயற்சிகளும் ஆதரவும் சிதைக்கப்பட்டது என்பது துயரத்துக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்கும் உரியது. ஆயுதப்போராட்டங்களை அரசு ஒடுக்கியது. அரச இயந்திரம் எப்போதும் அதனுடைய இயல்பில் அதையே செய்யும். அதையே செய்துமிருக்கிறது. இதில் இன வேறுபாடு என்று எதுவும் இல்லை. 1971 இலும் 1989 இலும் எப்படி ஜே.வி.பியை அரசாங்கம் ஒடுக்கியதோ அதைப்போலவே தமிழ் இயக்கங்களையும் (புலிகளையும்) அரசாங்கம் ஒடுக்கியது. இன்னும் இதை உன்னித்துச் சொன்னால், 1971 இல் ஜே.வி.பியை ஒடுக்கியது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம். 1989 இல் ஒடுக்கியது, ஐ.தே.க அரசாங்கம். இரண்டும் அதிகார நிலையில் ஒன்றே. அரசு என்று வந்து விட்டால் நிறங்கள், பெயர்கள் வேறாக இருந்தாலும் பொதுக்குணம் ஒன்றாகி விடுகிறது. அரசு என்ற அதிகார வடிவத்தின் பொதுப் பண்பு இதுவே. இதேவேளை 1971 இல் சுதந்திரக் கட்சி அரசாங்கத்துக்கு இந்தியா வெளிப்படையாகவே அனுசரணை வழங்கியது. 1989 இல் இந்தியா அமைதியாக இருந்தது. அல்லது மறைமுகமாக ஆதரவளித்தது எனலாம். அரசுக்கு அரசு உதவும் இயல்பும் அதிகாரத் தரப்புகளின் ஒற்றுமையும் ஒன்றே. இதுதான் புலிகளைத் தோற்கடித்தபோதும் (2009 இலும்) நடந்தது.
இதன்போதெல்லாம் மக்களே அழிவுகளையும் நெருக்கடிகளையும் சந்தித்தனர். இருந்தாலும் அவர்கள் மாற்றத்தைக் குறித்துச் சிந்திப்பதை தவிர்க்கவில்லை. தங்களை மாற்றத்தின் திசையை நோக்கியே அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். ஆகவே மாற்றத்துக்கு மக்கள் கடுமையாக றிஸ்க் எடுத்திருக்கிறார்கள். எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த மாற்றத்துக்குத் தலைமை ஏற்ற சக்திகள்தான் தொடர்ந்தும் அரசியல் தவறுகளை இழைத்திருக்கின்றன. ஜே.வி.பியும் தவறிழைத்திருக்கிறது. இப்போது ஜனநாயக அரசியல் வழிமுறைக்கு வந்த பிறகும் கூட ஜே.வி.பி இன்னும் சரியான பாதையைக் கண்டறிய முடியாமல் தடுமாறிக் கொண்டேயிருக்கிறது. மூன்றாவது சக்தி என்ற கருதப்பட்ட ஜே.வி.பி இன்று அதிலிருந்து பின்னடைந்துள்ளது இதற்கு உதாரணம். முற்போக்கு நிறத்தைச் சூடிக் கொண்டிருக்கும் ஜே.வி.பி மலையக மக்களையோ தமிழ், முஸ்லிம் சமூகங்களையோ வென்றெடுக்கவும் இல்லை. நெருங்கிச் செல்லவும் இல்லை. சிங்களச் சமூகத்திலும் தன்னை வளர்த்துக் கொள்ள முடியாமலிருக்கிறது. இதைக்குறித்தெல்லாம் இன்னும் அந்தக் கட்சிக்குள் சரியான மதிப்பீடுகளும் உணர்தல்களும் ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதுவொரு பெருந்துயரம்.
ஜே.வி.பி சரியான முறையில் நல்லதொரு பாதையை வகுத்துக்கொண்டு பயணித்திருந்தால் இன்றைய நெருக்கடிகள் அதற்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இலங்கைச் சமூகங்களும் வேறான நிலையிலிருந்திருக்கும். நாடும் வேறுவிதமான வளர்ச்சிப் பாதையில் சென்றிருக்கும்.
தமிழ்த் தரப்பில் மாற்றத்துக்காக முயற்சித்த விடுதலை இயக்கங்கள் தங்களுக்குள் உக்கிச் சிதைந்ததே வரலாறு. அல்லது ஒன்றை ஒன்று தோற்கடித்தன. புலிகள் அரசாங்கத்தினால் தோற்கடிக்கப்பட்டதாக கருதப்பட்டாலும் அவர்களுடைய தோல்விக்கும் உட்சிதைவுக் காரணங்கள் இருந்தன. ஒட்டுமொத்தத்தில் தமிழ்த்தரப்பு முஸ்லிம்களிமிருந்தும் தனிமைப்பட்டு, தனக்குள்ளும் தெளிவுகளும் ஒருங்கிணைப்பும் இல்லாமல் சிதைந்து தடுமாறிக் கொண்டிருக்கிறது. இன்று அதற்குப் பயணப் பாதையும் இல்லை. சரியான பயணமும் இல்லை.
இப்படித்தான் சந்திரிகா குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்ட ஆணையும் பிறகு ரணில் – மைத்திரி பங்காளர்களுக்காக வழங்கப்பட்ட நல்லாட்சிக்கான ஆணையும் மக்களுடைய நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாகச் சிதைக்கப்பட்டன. இதற்கமைவான புறச் சூழல் இல்லாதிருந்ததால்தான் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியினால் விரும்பியதைச் செய்யமுடியாமல் போனது. நல்லாட்சியின்போதும் இழுபறிகளும் உட்சரிவுகளும் ஏற்பட்டதால் திட்டமிட்ட எதையும் செய்ய முடியவில்லை என்று யாரும் சாட்டுப்போக்குகளைச் சொல்லக் கூடும்.
அரசியல் அர்த்தத்தில் இது ஏற்புடைய நியாயங்கள் இல்லை. அரசியல் என்பது நெருக்கடிகளும் சவால்களும் நிறைந்த கடினமா வழிப்பயணமே. அதன் வழிநெடுகத் தண்ணீப்பந்தலும் மலர்சொரிவுகளும் செங்கம்பள விரும்புமாக இருக்காது. எப்போதும் எதிர்நிலைச் சக்திகளின் நெருக்கடிகள் இருந்து கொண்டேயிருக்கும். அதுவும் இலங்கை போன்ற தென்னாசியப் பிராந்திய நாடுகளில் இது இன்னும் உச்சம். பொதுநன்மையைக் குறித்துச் சிந்திக்கும் அரசியல் நாகரீகமும் மாண்பும் மனப்பாங்கும் இங்கே கிடையாது. இங்கே உள்ளதெல்லாம் கட்சி நலன், தனிநலன் முதன்மைப்பாடுகளே. இதற்கமைய மாறி மாறி கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பிரயோகிப்பார்கள். இதனால்தான் முதலில் சொல்வதற்கும் பின்னர் எடுக்கும் நிலைப்பாட்டுக்குமிடையில் முரண்பாடுகளும் வேறுபாடுகளும் எழுகின்றன.
ஆகவே கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் விரைந்து வேலை செய்வதே இதற்கு ஒரே வழி. அதற்குரிய திடசித்தம் (உறுதிப்பாடு) தலைவர்களுக்கிருக்க வேண்டும். தங்களுடைய ஆளுமையினாலும் சிந்தனையினாலும் அரசியல் உறுதிப்பாட்டினாலும் மனப்பாங்கினாலும் இதைச் சாதிக்க முடியும். வரலாறு முழுவதும் இப்படித்தான் தம்முன்னிருந்த வரலாற்று நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் தலைவர்கள் தீர்த்து வைத்திருக்கின்றனர். தீர்வு கண்டிருக்கின்றனர். இதன்மூலம் பேராளுமைகளாக வரலாற்றிலும் உலகப்பரப்பிலும் மேலெழுந்திருக்கிறார்கள்.
இலங்கையின் அத்தனை தலைவர்களும் தோற்றுப்போனவர்களே. அது ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த தலைவர்களாக இருக்கலாம். ஜனநாயக அரசியல் வழிமுறைத்தலைவர்களாக இருக்கலாம். எல்லோருமே இதற்குள் அடக்கம். ஆயுதப்போராட்டத்தலைவர்கள் தோற்றது மட்டுமல்ல, தங்கள் உயிர்களையும் இழக்க வேண்டியதாயிற்று. அரசியல் தலைவர்கள் மதிப்பிழந்து போய் தெருவில் நிற்கிறார்கள். இன்று ரணில் விக்கிரமசிங்கவின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஐம்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தையும் அரசியல் செல்வாக்கையும் கொண்டிருந்த ரணில், கட்சியையும் காப்பாற்ற முடியாமல், தன்னுடைய அரசியல் ஸ்தானத்தையும் தீர்மானிக்க முடியாத நிலைக்குள்ளாகியுள்ளார். மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா குமாரதுங்க போன்றோரும் ஏறக்குறைய மதிப்பிழந்த முன்னாள் ஜனாதிபதிகளாகவே உள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம், மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றத் தவறியதே. மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பற்கு முடியாமல் போனதே. மக்களுக்கு விரோதமான அரசியலைப் பின்னர் முன்னெடுத்தமையே. நாட்டின் தேசிய விவகாரங்களான இனப்பிரச்சினை, பொருளாதாரச் சிக்கல்கள், பண்பாட்டு நெருக்கடிகள் போன்றவற்றுக்கான தீர்வைக் காணாமல் விட்டதே.
ஆகவேதான் சனங்கள் இவர்களைப் புறக்கணிக்க வேண்டியதாயிற்று. அல்லது தோற்கடித்தனர். இதுதான் தமிழ்ப்பரப்பிலும் நடந்திருக்கிறது. முன்னர் தமிழரசுக் கட்சியும் பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமிழ்ச்சமூகத்தினால் நிராகரிப்புக்குள்ளாகியதும் இப்படியே. இப்பொழுது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதும் இந்த அடிப்படையிலேயே.
இறுதியாகக் கடந்த ஆட்சியின்போது மக்கள் அரசியலமைப்பில் 18 க்குப் பதிலாக 19 ஐ விரும்பினார்கள். அல்லது அதற்கு ஆதரவளித்தனர். ஆனால், 19 ஆட்சித்தளம்பலைக் கொடுத்ததால் (மைத்திரி – ரணில் இறுபறி அல்லது ஜனாதிபதி – பிரதமர் அல்லது ஜனாதிபதி – பாராளுமன்றம் என்ற அதிகாரப் போட்டி) இதற்குப் பதிலாக ஒரு ஸ்திரமான ஆட்சி வேணும். அதற்கமைவான அரசியலமைப்பு வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள்.
மக்கள் எப்போதையும்போல இன்னொரு மாற்றத்துக்காக ஆதரவளித்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். ஆனால், இதை எப்படி இந்த அரசாங்கம் அல்லது இந்த ஆட்சித்தரப்பினர் காப்பாற்றவுள்ளனர் என்பதே இன்றுள்ள கேள்வியும் எதிர்பார்ப்புமாகும்.
இந்த வாரங்களில் கொண்டு வரப்படவிருந்த 20 வது திருத்தம் தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதில் பலவிதமான கோணங்களும் பார்வைகளும் முன்வைக்கப்படுகின்றன. ஆளும் தரப்புக்குள்ளும் இதைப்பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. வெளியில் 20 க்கு எதிப்புக்காட்டப்படுகிறது.
எதிர்ப்போ, ஆதரவோ எதுவும் மக்களுக்கு வெளியே என்றால் அது பயனற்றுப்போகும். வரலாற்றில் இன்னொரு தவறாகவே போய் முடியும். இதுதான் வரலாற்றின் வாசிப்பாகும்.