யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் வசமாகச் சிக்கினர்!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கும்பலை இலக்காக வைத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், மருந்தகத்தில் இன்று (07) முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் வியாபார நோக்கத்துடன் 1100 போதை மாத்திரைகளுடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் பிரபல மருந்தகத்தின் ஊழியர் என விசாரணையில் தெரியவந்தது.
அதனடிப்படையில் மருந்தகத்தில் முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் மேலும் இரண்டு பெட்டிகளில் சுமார் 250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அந்த மாத்திரைகள் வலி நிவாரணியாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இருவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மீதும் மருந்தகம் மீதும் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” – என்றும் பொலிஸார் மேலும் கூறினர்.
யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் பரிசோதகர் தெ.மேனன் தலைமையிலான மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.